இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான உறவு வலுப்படுத்தப்படும் : ஷென் யிங்க் உறுதி!


சீன அதிபரின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான சேன் யிங்க் இன்று (20) முற்பகல் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துள்ளார்.

இதன் போது, சீனா மற்றும் இலங்கைக்கு இடையிலான சுற்றுலா, வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் உள்ளிட்ட இலங்கைக்கு சீனா வழங்கும் ஆதரவுகளுக்கு இந்த சந்திப்பின் போது ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.

சுற்றுலா, விளையாட்டு, விவசாயம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது இலங்கையின் எதிர்பார்ப்பு என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் துறைமுக நகரம் என்பன இன்று முதலீட்டுக்குத் தயாராக இருப்பதாகவும் அவர் சேன் யிங்கிடம் கூறியுள்ளார். 

அத்துடன், பொருளாதார ரீதியில் அதிக பங்களிப்பை வழங்கக் கூடிய பட்டுப்பாதை திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்குப் பிரவேசிப்பதற்கு அதன் பங்காளரான இலங்கை போன்ற நாடுகள் தயாராக இருப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்திற்குள் பிரவேசிக்க இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் இந்த சந்திப்பின் போது ரணில் விக்ரமசிங்க விளக்கியுள்ளார்.

இந்து சமுத்திரம், கடற்பயணத்திற்கான சுதந்திர வலயமாக இருக்க வேண்டும் எனவும் புவிசார் அதிகாரப் போட்டியின்றி அமைதியான வலயமாக பேண இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சீனா-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மிக விரைவில் நடைமுறைப்படுத்தவும் இரு தரப்பும் உடன்பாடு தெரிவித்துள்ளன.

இலங்கைக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய ஷென் யிங்க், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பின் போது, அதிபரி்ன் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, அதிபரின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் தினுக் கொழம்பகே ஆகியோரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.