குவைத் ஓமானுடன் கைகோர்த்த சீனா! கள விஜயமாகும் போர்க்கப்பல்கள்

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது போர் கப்பலை காசாவுக்கு அருகே நிலை நிறுத்தியுள்ள நிலையில் சீன கடற்படையானது ஓமான், குவைத் நாடுகளின் கடற்படையுடன் இணைந்து கூட்டு பயிற்சியை மேற்கொண்டுள்ளது.

கடந்த 7ம் திகதி அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இதற்கு எதிராக இஸ்ரேல் கடந்த 15 நாட்களாக கொடூரமான பதில் தாக்குதலை தொடுத்து வருகிறது.

இதனால் தற்போது வரை காசாவில் 1,500 குழந்தைகள் உட்பட 4,137 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல 13,400 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி தேவைப்படுவதால் இஸ்லாமிய நாடுகளும், ஐநாவும் உதவி பொருட்களை அனுப்பி வைத்திருக்கிறது.

இந்த பொருட்கள் கடந்த சில நாட்களாக ராஃபா எல்லையில் இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று காசாவுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

பலஸ்தீனத்தில் பாதிப்பு கடல் அளவுக்கு இருக்கும் நிலையில் உதவி பொருட்கள் கடுகளவுக்குதான் இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி இருக்கும் நிலையில், இந்த சூழலை மேலும் மோசமாக்கும் விதமாக இஸ்ரேல், காசா மீதான தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருகிறது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, தனது 'யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்ட்' எனும் போர்க்கப்பலை மத்திய தரைக்கடலில் காசாவுக்கு அருகே நிலை நிறுத்தியுள்ளது.

இதனையடுத்து பிரிட்டன் தனது 'R08 குயின் எலிசபெத்' (R08 Queen Elizabeth) என்ற 60 விமானங்களை தாங்கக் கூடிய போர் கப்பலை காசாவை நோக்கி அனுப்ப முடிவெடுத்துள்ளது.

இவ்வாறு பலம் வாய்ந்த மேற்கு நாடுகள் மொத்தமாக இஸ்ரேலுக்கு ஆதரவாக களத்தில் இறங்க, ரஷ்யாவும், சீனாவும் இஸ்லாமிய நாடுகளுக்கு ஆதரவாக களத்தில் குதித்திருக்கின்றன.

அதாவது ரஷ்யா தனது போர் விமானத்தையும், அத்துடன் சில ராணுவ தளவாடங்களையும் சிரியாவுக்கு அனுப்பியது.

அதேபோல தற்போது சீனா, தனது கடற்படை கப்பல்களை குவைத்துக்கு அனுப்பி குவைத் மற்றும் ஓமான் நாட்டின் கடற்படையுடன் இணைந்து போர் பயிற்சியை மேற்கொண்டிருக்கிறது.

முதலில் ஓமான் பயணத்தை முடித்துக்கொண்டு குவைத் திரும்பிய சீனாவின் ஜிபோ, ஜிங்ஜோ மற்றும் கியாண்டாவோஹு உள்ளிட்ட 6 போர்கப்பல்கள் குவைத் கடற்படையுடன் பயிற்சியை கடந்த 19ம் திகதி நிறைவு செய்தது.

பயிற்சி முடிந்த பின்னரும் தற்போது குவைத்தின் ஷுவைக் துறைமுகத்தில்தான் இந்த கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த துறைமுகத்திற்கும் மத்திய தரைக்கடலுக்கும் இடையே சுமார் 1,500 கி.மீ தொலைவு இருக்கிறது.

இருப்பினும் இந்த போர்க்கப்பல்களில் உள்ள ஏவுகணைகளுக்கு இந்த தொலைவு ஒரு பொருட்டே கிடையாது. எனவே இந்த பகுதியில் பதற்றம் சற்று அதிகரித்திருக்கிறது.