பிலிப்பைன்ஸ் வீரர்களை கோடாரியால் தாக்கிய சீனா : தென் சீனக் கடலில் சம்பவம்


தென் சீனக் கடலில் நடந்த மோதலின் போது கோடாரி மற்றும் கூரிய ஆயுதங்களால் சீனா தாக்குதல் நடத்தியதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சுமத்தியுள்ளது.

குறித்த தாக்குதலானது, ஜூன் 17ஆம் திகதி நடந்த போதும்,நேற்றையதினம்(20) பிலிப்பைன்ஸ் இராணுவம் இது குறித்த காணொளிகளை வெளியிட்டுள்ளது.

அந்த காணொளியில், சீன கடலோர காவல்படையினர் கையில் ஆயுதங்களை ஏந்தியபடி பிலிப்பைன்ஸ் இராணுவ வீரர்களை மிரட்டுவதும், பிலிப்பைன்ஸின் படகுகளை தாக்கியதும் பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் பிலிப்பைன்ஸ் இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கையில், சீன கடலோர காவல்படை அதிகாரிகள் தங்கள் படகில் சட்டவிரோதமாக ஏறி, அவர்களிடமிருந்த ஆயுதங்களையும், துப்பாக்கிகளையும் கொள்ளையடித்தனர்.

சீன அதிகாரிகள் கப்பலின் வெளிப்புற மோட்டார் மற்றும் வழிநடத்தும் கருவிகளை அழித்ததுடன் பிலிப்பைன்ஸ் தொலைபேசிகளையும் பறித்துச் சென்றனர். பிலிப்பைன்ஸ் கடற்படையைச் சேர்ந்த ஒருவரின் கட்டைவிரலும் துண்டிக்கப்பட்டுள்ளது.” என குறிப்பிட்டனர்.

மேலும், சீன அதிகாரிகள் தங்கள்  படகை கூர்மையான ஆயுதங்களால் துளைத்ததாக பிலிப்பைன்ஸின் ஆயுதப்படை தளபதி அல்போன்சோ டோரஸ் கூறியுள்ளார்.

தென் சீனக் கடலை சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் , இந்தோனேஷியா  போன்ற தெற்காசியாவின் பல நாடுகளும் உரிமை கோருகின்றன.

தென் சீனக் கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா புதிய கடல்சார் சட்டத்தை அண்மையில் நடைமுறைப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.