காசாவில் கனேடிய நாட்டவர் மாயம், கடத்தப்பட்டாரா என சந்தேகம், அமெரிக்காவில் வெடித்தது முரண்பாடு

கடுமையான போர் இடம்பெற்றுவரும் காசா பிராந்தியத்தில் பலஸ்தீன – கனடிய பிரஜையான மன்சூர் சௌமான் என்ற ஊடகவியலாளர் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் முறையிட்டுள்ளனர்.

காசாவில் இடம்பெற்று வரும் மனிதாபிமான நடவடிக்கைகளை பதிவு செய்யும் நடவடிக்ககைளில் ஈடுபட்டு வந்த நிலையில் இவர் காணாமல் போயுள்ளார்.

தென் காசா பிராந்தியத்தின் நாசர் வைத்தியசாலை பகுதியில் சௌமானை இறுதியாக கண்டதாக சிலர் தெரிவித்துள்ளனர்.

சௌமான் கடத்திச் செல்லப்பட்டதாக நேரில் கண்ட சிலர் குறிப்பிட்டுள்ளனர். எனினும், இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சௌமான் காணாமல் போன விவகாரம் தொடர்பில் கனடிய வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. நிலைமைகள் குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அறிவித்துள்ளது.   

இதேநேரம் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பில் அமெரிக்க உயர் அதிகாரிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலின் வேண்டுகோளின் பேரில் காஸா பகுதியில் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கியிருந்தது.

எனினும், இஸ்ரேல் கோரும் உயர் சக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்குவதை தாமதப்படுத்துவது அல்லது இடைநிறுத்துவது அமெரிக்க உயர் அதிகாரிகளின் கவனம் என்று தெரிவிக்கப்படுகிறது.

பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக ஒரு நடைபாதையை திறப்பதற்கு இஸ்ரேலிய அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதே இந்த முடிவின் நோக்கம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.