இலங்கை தமிழர்களுக்கு பச்சைக் கொடி காட்டிய கனடா

இலங்கை தமிழர்களுக்கு தொடர்ந்தும் கனடா ஆதரவளிக்குமென தெரிவித்துள்ளது.

கறுப்பு ஜூலையின் 40 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டதை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நினைவூட்டியுள்ளார்.

இவ்வாறாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் வன்முறைகள் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழ்ந்தமையால் ஏற்பட்ட காயம் இன்றும் மக்கள் மனதில் ஆராது இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட இன அழிப்பின் பின்னர், இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் கனடாவில் பாதுகாப்பாக வாழ்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, ஆயிரத்து 800 பேர் அப்போது கனடாவுக்கு புலம்பெயர்ந்ததாகவும் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

இந்த நிலையில், இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் பொறுப்புக் கூறப்படவேண்டும் என்ற கோரிக்கையை கனடா தொடர்ந்தும் முன்வைக்குமென அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினருக்கு உதவும் நடவடிக்கைக்கும் கனடா தொடர்ந்தும் ஆதரவளிக்குமென ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்துள்ளார்.