சாணக்கியனை புலிகள் என்று சொல்லியமை இனத்தை அவமதிக்கும் செயல்:- மாவை அதிருப்தி


நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் பேச்சை தாங்கிக் கொள்ள முடியாமல், கேட்ட கேள்விக்கும் பதில் சொல்வதற்கு இடமளிக்காமல், அமைச்சர் பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் இருக்கின்றவர்கள், சாணக்கியனை புலிகள் என குற்றம் சுமத்தி பாவித்த வார்த்தைகள் நாடாளுமன்ற நடைமுறையில் இருந்து நீக்கப்பட வேண்டியவைகள் என தான் நினைப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

யாழில் வைத்து அண்மையில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தில் பாவிக்க வேண்டிய வார்த்தைகள், பாவிக்கக்கூடாத வார்த்தைகள் என்று பகுத்து அதற்கு தீர்ப்பு சொல்ல வேண்டிய பொறுப்பு சபாநாயகருக்கு இருக்கிறது.

ஆனபடியால் சாணக்கியனின் உரைக்கு, அவரை புலிகள் என வர்ணிப்பது எங்களுடைய இனத்தை, அவர்களுடைய குரலை, அவர்கள் நீதிக்காக குரல் கொடுப்பதை மறுத்து, புலிகள் என்று சொல்லி எங்களுடைய இனத்தை அவமதித்தமை மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

இவை காலம் காலமாக இலங்கை நாடாளுமன்றத்திலும் தென்னிலங்கை சமூகத்திடம் இருந்தும், சில அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமிருந்தும் வருகின்ற வார்த்தைகள் என்பதை நாம் நினைவுகூர்ந்து கொள்கிறோம்.

நாடாளுமன்ற சபாநாயகர் இதற்கு பொருத்தமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.