உணவை பெற்றுக்கொள்ள வந்த மீது கொடூர தாக்குதல் : 104 பாலஸ்தீனர்கள் பலி - Video

காசா நகரின் அல் ரஷீத் வீதியில் உணவு உதவிக்காக காத்திருந்த பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நேற்று (29) நடத்திய தாக்குதலில் குறைந்தது 104 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வடக்கு காசாவுக்கான உதவிகளை இஸ்ரேலிய படை முற்றாக துண்டித்திருக்கும் நிலையில் அங்குள்ள மக்கள் உணவுக்காக காத்து வீதிகளில் திரண்டுள்ளனர். இவ்வாறு கூடியிருந்தவர்கள் மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்துக்கு சென்றபோது பல உடல்கள் சிதறிக் கிடந்ததாக காசா அம்புலன்ஸ் சேவை தலைவர் பாரிஸ் அபானா தெரிவித்துள்ளார்.

இதில் காயமடைந்த சிலர் போதுமான அம்புலன்ஸ் வண்டிகள் இல்லாததால் கழுதை வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அதிகாலை 4 மணி அளவில் உதவி லொறி வந்தபோது அதனை நோக்கி வீதிக்கு வந்த மக்கள் மீதே இஸ்ரேல் படை சூடு நடத்தியதாக 31 வயதான அஹமது என்பவர் ‘மிட்டில் ஈஸ்ட் ஐ’ செய்தித் தளத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

அஹமதின் கை மற்றும் காலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. ‘இந்த துப்பாக்கிச் சூடு கண்மூடித்தனமாக இருந்தது. அங்கிருந்தவர்களின் தலை, வயிற்றிலும் குண்டுகள் பாய்ந்தன’ என்றும் அவர் கூறினார். கொல்லப்பட்ட ஒருவருக்கு மேலால் டாங்கிகள் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பசியில் இருந்த பலஸ்தீனர்கள் உணவு உதவி வண்டிக்காக காத்திருந்தபோது வன்முறை மிக்க அந்த ஒன்றுகூடலில் படையினர் பாதுகாப்பற்ற நிலையை உணர்ந்தனர் என்று இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தாக்குதலை பலஸ்தீன அதிகாரசபை ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், ஹமாஸ் அமைப்பு மற்றும் எகிப்து கடுமையாக கண்டித்துள்ளது.