வடக்கு ஆளுநருக்கும் பிரித்தானிய தூதரகத்தின் பிரதிநிதிக்குமிடையில் சந்திப்பு



இந்த அரசாங்கத்தின் காலத்தில் தமது பிரச்சினைகள் தீர்க்கப்படும் என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் (N.vedhanayagan) பிரித்தானிய தூதரகத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைகளுக்கான முதனிலைச் செயலர் ஹென்றி டொனைட்டிடம் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று(10) காலை இடம்பெற்ற சந்திப்பின்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமைக்கு முதலில் வாழ்த்துக்களைத் தெரிவித்த ஹென்றி டொனைட், வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அறிவதே  தனது பயணத்தின் நோக்கம் என இதன்போது கூறியுள்ளார்.

காணிகள் விடுவிப்பு

வடக்கு மாகாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரிடமிருந்து இன்னமும் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும், குறிப்பாக மக்களின் காணிகள் கடந்த காலங்களில் அவர்கள் இடம்பெயர்ந்திருந்த சந்தர்ப்பங்களில் வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களம் என்பனவற்றால் தமது ஆளுகைக்கு உட்பட்டதாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டமையால் தற்போது சிக்கல் நிலைமைகள் ஏற்பட்டுள்ளது என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

விவசாயிகள் வாழ்வாதாரம் இதனால் கடுமையான பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது என்று குறிப்பிட்ட ஆளுநர், வடக்கு மாகாண  மக்களின் முக்கியமான பிரச்சினையாக இது உள்ளது எனவும் தெரிவித்தார். 

கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட சில வீட்டுத் திட்டங்கள் இடைநடுவில் இருப்பதால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் எனவும் அவை விரைவில் பூர்த்தியாக்கப்பட வேண்டிய தேவை உள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

வலி. வடக்கில் பாதுகாப்புத் தரப்பினர் வசம் நீண்ட காலம் இருந்த வீதி மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டமை சிறந்த நடவடிக்கை எனக் குறிப்பிட்ட ஆளுநர், மேலும்  மக்கள் வீதிகளை, காணிகளை விடுவிக்கக் கோருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் பாதுகாப்புத் தரப்பினரால் ஏற்படுத்தப்பட்டிருந்த சோதனைச் சாவடிகள் மற்றும் வீதித் தடைகள் என்பன அகற்றப்பட்டுள்ளன என்பதையும் ஆளுநர் குறிப்பிட்டார்.

முதலீட்டாளர்கள் மாநாடு

தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளமையால் அதிகளவில் வருகின்றனர் எனக் குறிப்பிட்ட ஆளுநர் அடுத்த ஆண்டு முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையிலும் இளையோருக்கான வேலைவாய்ப்புக்களை வழங்கும் நோக்கிலும் பலாலியிலுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கப்படவுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பொதிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் விரைவில் அதற்கும் சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் தமிழகத்தில் அண்ணளவாக ஒரு லட்சம் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக உள்ளனர் எனவும் அவர்கள் நாடு திரும்பினால் அவர்களுக்குரிய வாழ்வாதார, வதிவிட உதவிகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தின் பிரதான வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டபோதும் உள்ளக வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவில்லை என்று குறிப்பிட்ட ஆளுநர் அவற்றை எதிர்காலத்தில் விரைந்து அபிவிருத்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும், தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலேயே அபிவிருத்திகளைச் செய்து முடிக்கலாம் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, ஐ.நா. முகவர் அமைப்புக்கள் ஊடாக பிரிட்டன்(United Kingdom) அரசாங்கம் கடந்த காலங்களில் வடக்கு மக்களுக்கு மேற்கொண்ட உதவிகளுக்கு ஆளுநர் நன்றிகளையும் தெரிவித்தார்.