பாரதிராஜா நலமோடு இருக்கிறார் வதந்தி பரப்புவதற்கு வாய்ப்பே இல்லை!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார்.

இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதையடுத்து சிகிச்சை பெற்று வரும் இயக்குனர் பாரதிராஜா அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாரதிராஜாவை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்துள்ளார் கவிஞர் வைரமுத்து.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இயக்குனர் பாரதிராஜா நலமோடு இருக்கிறார். நாளும் நாளும் தேறி வருகிறார். மருத்துவர்கள் நல்ல சிகிச்சையை வழங்கி வருகிறார்கள். அச்சப்படுவதற்கு ஆதாரம் இல்லை. வதந்தி பரப்புவதற்கு வாய்ப்பே இல்லை.

நுரையீரலில் சற்றே நீர் சேந்திருக்கிறது. அதுவும் சரி செய்யப்படும் என்று உறுதி தரப்பட்டிருக்கிறது. அவர் நன்றாக பேசுகிறார், அடையாளம் கண்டுகொள்கிறார், நல்ல நிலையில் இருக்கிறார். நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம். பாரதிராஜா மீண்டும் மீண்டு வருவார் கலை உலகை ஆண்டு வருவார்” என்று கூறினார்.