ஹமாஸ் போர்நிறுத்தத்தை நிராகரித்த பெஞ்சமின் : ரபா நகரில் ஆபத்தான நிலைமை

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான புதிய சுற்று பேச்சுவார்த்தைகள் நேற்று (08) ஆரம்பமான நிலையில், எகிப்து எல்லையை ஒட்டிய மக்கள் நிரம்பி வழியும் தெற்கு காசாவின் ரபாவுக்குள் நுழைய இராணுவ வீரர்களை தயாராக இருக்கும்படி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.

போர் நிறுத்தம் ஒன்றுக்கான முன்மொழிவுக்கு ஹமாஸ் அளித்த பதிலை நெதன்யாகு நிராகரித்ததை அடுத்தே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 போர் நிறுத்த முன்மொழிவை ஒட்டி இராஜதந்திர முயற்சிகள் தீவிரம் அடைந்திருப்பதோடு பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டினி பிளிங்கனும், “உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கு இன்னும் வாய்ப்பு உள்ளது” என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் தஞ்சமடைந்திருக்கும் ரபாவை நோக்கி இஸ்ரேலிய படைகள் முன்னேறுவது தொடர்பில் கவலை அதிகரித்துள்ளது. இந்த நகரை நோக்கி படைகள் முன்னேறுவது “ஏற்கனவே உள்ள மனிதாபிமான நெருங்கடியை அதிவேகமாக அதிகரிக்கும்” என்று ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டரஸ் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் தொலைக்காட்சியில் பேசிய நெதன்யாகு, ரபா நகரில் இராணுவ நடவடிக்கைக்கு தயாராகும்படி துருப்புகளுக்கு உத்தரவிட்டதாகவும் ஹமாஸ் மீதான முழு வெற்றிக்கு சில மாதங்களே எஞ்சி இருப்பதாகவும் தெரிவித்தார்.

போர் நிறுத்த முன்மொழிவு தொடர்பில் பேசிய அவர், “நாம் இப்போது கேள்விப்பட்ட ஹமாஸின் வினோதமான கோரிக்கைகளுக்கு அடிபணிவது… இன்னொரு படுகொலைக்கு அழைப்பு விடுப்பதாக இருக்கும்” என்றார்.

போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பிராந்தியத்திற்கு மற்றுமொரு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் பிளிங்கன், டெல் அவிவில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஹமாஸின் பதில் முன்மொழிவு குறைந்தபட்சம் பேச்சுவார்த்தையை தொடர வாய்ப்பை வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.

“ஹமாஸின் பதிலில் தெளிவாகவே வெற்றி அளிக்காத சில விடங்கள் இருந்தபோதும், அது உடன்பாடு ஒன்றை அடைவதற்கான வாய்ப்பை உருவாக்குவதாக நாம் நம்புகிறோம். அதனை அடையும்வரை நாம் ஓய்வின்றி செயற்படுவோம்” என்று நெதன்யாகுவை சந்தித்த பின்னர் பிளிங்கன் குறிப்பிட்டார்.

காசாவில் மேலும் தெற்காக இஸ்ரேலிய படை முன்னேற தயாராகும் நிலையில், ஏற்கனவே எகிப்துடனான எல்லை வரை துரத்தப்பட்டு தற்போது ரபாவில் அடைக்கலம் பெற்றுக்கும் பலஸ்தீனர்களின் நிலை தொடர்பில் கவலை அதிகரித்துள்ளது.

காசாவின் 2.4 மில்லியன் மக்கள் தொகையில் பாதிக்கும் அளவானவர்கள் தற்போது ரபாவில் அடைக்கலம் பெற்றிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.