வங்கி கட்டமைப்பு முழுமையாக பாதிக்கும்..! பட்டாசு வெடித்து கொண்டாடும் மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை சட்டமாக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளமை அவதானத்திற்குரியது என சுயாதீன எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

நாவல பகுதியில் நேற்றைய தினம் (06.04.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை சட்டமாக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளமை அவதானத்திற்குரியது.

பொருளாதார மீட்சிக்கான எந்த திட்டங்களும் இல்லாமல் சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ளதால் நாணய நிதியம் முன்வைக்கும் கடுமையான நிபந்தனைகளை செயற்படுத்துவதை தவிர வேறு வழியில்லை.

மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி சர்வதேச ஊடகத்திற்கு நாட்டின் பொருளாதார மீட்சி தொடர்பில் முக்கிய விடயங்களை குறிப்பிட்டுள்ளார்கள்.

இலங்கை எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு (2024, 2025, 2026, 2027, 2028) 21.9 பில்லியன் டொலர் அரச முறை கடனை மீள் செலுத்த வேண்டும்.

பிரதான நிலை கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு கடன் தவணை காலத்தை மட்டுப்படுத்திக் கொள்ள அல்லது கடன் தொகையை குறைத்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

வெளிநாட்டு கடன்களை மாத்திரம் மறுசீரமைக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுவது அடிப்படையற்றதாகும்.

தேசிய கடன் மறுசீரமைக்கும் போது வங்கி கட்டமைப்பு முழுமையாக பாதிக்கப்படுவதால் வங்கி வைப்பாளர்கள் பாதிக்கப்படுவதுடன் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய வைப்புக்கள் பாதிக்கப்படும்.

அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் நிச்சயம் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். மக்கள் போராட்டத்தை தடுப்பதற்காகவே அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டத்தை உருவாக்க விசேட கவனம் செலுத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுவிட்டதால் பட்டாசு வெடித்து கொண்டாடுவதை விடுத்து மக்கள் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும் என கோரியுள்ளார்.