வங்கியில் பணம் வைப்பு செய்துள்ளவர்களா நீங்கள் - வெளியாகிய முக்கிய அறிவிப்பு..!


நாட்டு மக்களின் வங்கிக் கணக்குகளிலுள்ள வைப்புகளுக்கோ அவற்றின் வட்டி வீதங்களுக்கோ உள்நாட்டு கடன் மீள்கட்டமைப்பு நடவடிக்கையால் எந்த பாதிப்பும் ஏற்படாதென இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

மக்களின் ஊழியர் சேமலாப நிதியத்திற்கோ ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கோ ஓய்வூதியத்திற்கோ இதனால் எந்த பாதிப்பு ஏற்படாது எனவும் உறுதியளித்துள்ளார்.

மேலும், கடன் மீள்கட்டமைப்பு என்பது குறைப்பு செய்யும் நடவடிக்கை அல்ல. இதன்மூலம் கடனை பிற்போடுவது, கடனை குறைப்பது,கடன் செலுத்தும் கால எல்லையை நீடிப்பது போன்ற செயற்பாடுகள் இடம்பெறுவதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடன் மீள்கட்டமைப்பு நடவடிக்கை மூலம் மக்களின் வங்கிக் கணக்குகளிலுள்ள வைப்புகளுக்கோ அவற்றின் வட்டி வீதங்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாதென மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவும் உறுதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நாட்டு மக்களின் வங்கி வைப்புத் தொகையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நேற்று (26) பிற்பகல் அதிபர் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அதிபர் ரணில் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

 "உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் யாரும் பயப்பட தேவையில்லை. இது தொடர்பில், நாடாளுமன்ற விவாதத்திற்கு இரண்டு நாட்களை கூட ஒதுக்க முடியும்.

இந்த விடயம் தொடர்பான பிரேரணை வருகின்ற ஜூலை மாதம் முதலாம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். தேவையென்றால் அதனை வேறொரு நாளிலும் விவாதிக்க முடியும்" என அதிபர் ரணில் கூறியுள்ளார்.