5 வயது குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி வருந்தும் பெண்ணின் புகைப்படத்துக்கு விருது


20244ஆம் ஆண்டுக்கான வேர்ல்ட் பிரஸ் போட்டோ விருதை ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்காக பணியாற்றி வரும் முகமது சலேம் என்ற பத்திரிகையாளர் வென்றுள்ளார்.


இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பிற்கு இடையிலான மோதலில் உயிரிழந்த 5 வயது குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி வருந்தும் பெண்ணின் புகைப்படத்துக்கு விருது கிடைத்துள்ளது.

இந்தப் புகைப்படம் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தெற்கு காசாவின் கான் யூனிஸ் என்ற பகுதியில் அமைந்துள்ள நாசர் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது.

 
மருத்துவமனையின் சவக்கிடங்கில் துணியால் சுற்றப்பட்ட உயிரிழந்த தனது 5 வயது மருமகளின் உடலைப் பார்த்து பெண் ஒருவர் அழுவதை தனது கமரா கண்களின் வழியே படம் பிடித்திருந்தார் முகமது சலேம்.

 
ஆம்ஸ்டர்டாமை தலைமையிடமாகக் கொண்ட வேர்ல்ட் பிரஸ் போட்டோ ஃபவுண்டேஷன் அமைப்பு ஆண்டுதோறும் சிறந்த படத்துக்கான விருதை வழங்கி வருகிறது.

அந்த வகையில் யுத்தம், மோதல் போன்ற பகுதிகளில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலை அங்கீகரிப்பது அவசியம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
 
கடந்த ஒக்டோபரில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான மோதலில் சுமார் 99 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் தமது இன்னுயிரை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
 
முகமது சலேம், 39 வயதான பலஸ்தீன நாட்டைச் சேர்ந்தவர். புகைப்பட பத்திரிகையாளர். 2003 முதல் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு கடந்த 2010இல் வேர்ல்ட் பிரஸ் போட்டோ விருதை வென்றுள்ளார்.