போர் நிறுத்த பேச்சுக்கு மத்தியில் காசாவில் தொடர்ந்தும் தாக்குதல்


எகிப்துடனான காசா எல்லைக் கடவையை கைப்பற்றி அங்கு உதவிகள் செல்வதை மேலும் முடக்கி இருக்கும் இஸ்ரேல் இராணுவம் காசாவில் நேற்றும் (08) அதிரடித் தாக்குதல்களை நடத்தியதோடு போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் கடைசிக் கட்ட முயற்சியில் பேச்சுவார்த்தையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காசாவில் இடம்பெயர்ந்த மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபாவில் சர்வதேசத்தின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் இஸ்ரேல் படை நடவடிக்கை ஒன்றுக்கு தயாராகி வருகிறது.
 கடந்த செவ்வாய்க்கிழமை எகிப்துடனான ரபா எல்லைக் கடவையை கைப்பற்றி இஸ்ரேல் இராணுவம் கிழக்கு ரபாவில் இருந்து பொதுமக்களை வெளியேற்றி வருகிறது.


இந்த நெருக்கடியான சூழலில் பேச்சுவார்த்தையாளர்கள் மற்றும் மத்தியஸ்தர்கள் போர் நிறுத்தம் ஒன்றுக்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பலஸ்தீன போராளிகளின் பிடியில் இருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் எட்டு மாதங்களை தொட்டிருக்கும் போரை நிறுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு இஸ்ரேலுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு இதுவென்று பெயர் குறிப்பிடாத ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்க மத்தியஸ்தர்கள் கெய்ரோவில் ஹமாஸ் பிரதிநிதிகள் குழுவை சந்தித்து பேசியதாக எகிப்து அரசுடன் தொடர்புபட்ட அல் ஹகெரி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


இந்தப் பேச்சுவார்த்தைக்கு அனைத்து தரப்பும் இணங்கி இருப்பதோடு இஸ்ரேல் தனது பிரதிநிதிகளை கெய்ரோவுக்கு அனுப்பியுள்ளது.

இரு தரப்பும் பிளவுகள் தொடர்பில் தீர்வு காணும் என்று நம்புவதாக இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
‘அனைவரும் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்துள்ளனர்’ என்று குறிப்பிட்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு கௌன்சில் பேச்சாளர் ஜோன் கிர்பி, ‘இது முக்கியமானதாகும்’ என்றார்.

முன்னதாக ஹமாஸ் இணங்கிய போர் நிறுத்த முன்மொழிவை இஸ்ரேல் நிராகரித்திருந்தது. ‘ஹமாஸின் முன்மொழிவு இஸ்ரேலுக்கு அவசியமான தேவைகளில் இருந்து மிகத் தொலைவில் உள்ளது. காசாவில் ஹமாஸ் கொடிய ஆட்சியை மீண்டும் அமைப்பதற்கு இஸ்ரேல் இடம் அளிக்காது’ என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருக்கும் அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. தலைவர் பில் பர்ன்ஸ், இஸ்ரேல் சென்று நெதன்யாகுவை சந்திக்கவிருப்பதாக நம்பகமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


ரபாவில் இஸ்ரேலின் படை நடவடிக்கை ஒன்றுக்கான திட்டம் மற்றும் அதனால் போர் நிறுத்தப் பேச்சுகள் முறியும் அபாயம் இருக்கும் சூழலிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.