ஜேர்மனியில் சைவ ஆலயத்தின் மீது தாக்குதல்!!

ஜெர்மன் கயில்புறோன் (Heilbronn) நகரில் உள்ள கந்தசாமி கோவில் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மற்றைய புலம்பெயர் நாடுகளிலுள்ள ஆலயங்களுடன் ஒப்பிடுகையில், விசேடமான வழிபாட்டு முறைகளையும், செயற்பாடுகளையும் கொண்டுள்ள இந்த ஆலயம் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதலானது, பக்தர்கள் மத்தியிலும், தமிழ் மக்கள் மத்தியிலும் கடும் விசனத்தை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த ஆலயத்தின் உட்கட்டுமானத்தில் வைக்கப்பட்டுள்ள தெய்வ விக்கிரகங்களுடன் தமிழ் மக்களின் காவல்தெய்வங்கள் என்று கூறப்படுகின்ற மாவீரர்களது தியாகங்களைப் புனிதமாகப் போற்றும் நோக்கோடு 'கார்த்திகைப்பூ' சுருவம் ஒன்றும் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றுவருவது வழக்கம்.

அப்படிப்பட்ட அந்த ஆலயத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதானது, ஒரு தேசிய விரோதச் செயற்பாடு என்று கூறுகின்றார்கள் பக்தர்கள்.

அதேவேளை, குறிப்பிட்ட அந்த ஆலயத்தில் தமிழ் மொழியில் பூசை செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவும் அந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

இந்த மாதம் 19ம் திகதி சைவநெறிக்கூடம் தமிழ் மொழியின் ஊடாக நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த 'செந்தமிழ் குடமுழுக்கு' நிகழ்வை தடுக்கும் முகமாகவும் அந்த ஆலயத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தாக்குதல் தொட்பாகக் கருத்து வெளியிட்ட ஒரு முக்கிய புலம்பெயர் ஆண்மீகத் தலைவர்,

'புலத்தில் முன்னெடுக்கப் படும் இனக்காப்பு மற்றும் மொழிக்காப்பு முயற்சிகளை குழி தோண்டிப் புதைக்கும் நோக்கத்தோடே அந்த ஆலயம் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், எனவே இவ்வாறான குழப்பவாதிகளை தமிழ் மக்கள் இனம்காண வேண்டியது காலத்தின் தேவை என்பதுடன், இவ்வாறான விடயங்கள் ஒரு மத ரீதியான விடயமாக மாத்திரம் கருதாமல், இன, மொழி சார்ந்த விடயமாகக் கருதி தொடரும் இனவழிப்பு முயற்சிகளைத் தடுக்க அனைவரும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்திருந்தார்.