காசாவுக்கு சென்ற உதவி வாகனங்கள் மீது தாக்குதல் : 24 பேர் பலி


காசாவுக்கு சென்ற உதவி வாகனங்கள் மீது இஸ்ரேலியப் படை நேற்று முன்தினம் நடத்திய மற்றொரு தாக்குதலில் மேலும் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வடக்கு காசாவின் குவைட் சுற்றுவட்டப்பாதையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உதவி லொறிகளை நோக்கி மக்கள் கூடியிருந்தபோது இந்த தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இதில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

காசாவில் உணவு பற்றாக்குறைக்கு மத்தியில் உதவி லொரிகள் மற்றும் அதற்காக காத்திருக்கும் மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது இது முதல் முறையல்ல. இவ்வாறான தாக்குதல்களில் 400க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசாவின் அரச ஊடக அலுவலகம் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தது.

கடந்த சில நாட்களாக காசா நகர் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக குடியிருப்பு கட்டடங்கள் தொடர்ந்து இலக்கு வைக்கப்பட்டு வருகின்றன.

நேற்று இடம்பெற்ற இவ்வாறான ஒரு தாக்குதலில் வீடு ஒன்று இலக்கு வைக்கப்பட்டதோடு அதில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என 15 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அல் ஜசீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

இதேநேரம் மூன்று மாடிக் கட்டடம் ஒன்று தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.