யாழில் ஆவா குழுவினரின் தாக்குதல் - விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை!



யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில், யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் மீது நேற்றைய தினம் இரவு இனம் தெரியாத நபர்களால் வெடி குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் போது, மேலுமொரு வெடி குண்டும், எச்சரிக்கை கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கும் ஆவா குழுவினருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

அந்த கடித்ததில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

பிரான்சில் வசிக்கும் நபர் ஒருவர் அங்கு வசிக்கும் பெண் ஒருவரிடம் காசோலையை கொடுத்து பணம் பெற்றுள்ளார். அவ்வாறு காசோலையைப் பெற்றுக்கொண்ட பெண், யாழில் உள்ள ஆவா குழுவினரிடம் அந்த காசோலையைக் கொடுத்தே பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், காசோலையைப் பெற்றுக்கொண்ட குழுவினர், அதனை மாற்றுவதற்காக வங்கிக்கு சென்றுள்ளனர். ஆனால் அந்த காசோலை பணம் பெறமுடியாமல் முடக்கப்பட்டுள்ளதாக வங்கியில்அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்ட குழுவினர், ஆத்திரமடைந்து இந்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஆகவே, தம்மிடமிருந்து பெற்றுக்கொண்ட பணத்தினை திரும்ப கையளிக்கம் வரை, பிரான்சில் பணம் பெற்றுக்கொண்ட நபரும், குறித்த குழுவினருக்கு காசோலையை வழங்கிய பெண்ணும் இலங்கைக்கு திரும்ப முடியாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை பணத்தைப் பெற்றுக்கொண்ட நபர் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட வாகன திருத்தக உரிமையாளரின் மருமகன் என்பதால், கடன் பிரச்சினையை தீர்த்து வைக்கும் வரை உரிமையாளரின் குடும்பத்தினரையும் நின்மதியாக வாழ விடமாட்டோம் எனவும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் குறித்த கடிதம் எழுத்தப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் இறுதியில் தம்மை ஆவா குழுவினர் என அடையாளப்படுத்தியுமுள்ளனர்.

இவ்வாறு வெடி குண்டு மற்றும் கடிதம் என்பவற்றை மீட்ட காவல்துறையினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.