ரஷ்யாவை உலுக்கியுள்ள கொடூர சம்பவம் : ஆப்கான் குழு பொறுப்பேற்பு


ரஷ்யாவில் கச்சேரி அரங்கம் ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட படுபயங்கரத் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இதுவரை 60 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தோர் எண்ணிக்கை 100 கடந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு தற்போது ஆப்கானிஸ்தானை சேர்ந்த ISIS-K என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

மொஸ்கோவின் மேற்குப் பகுதியில் உள்ள க்ரோகஸ் நகரின் மையத்தில் உள்ள 6200 பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட இசையரங்கில்தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

சம்பவத்தின் போது அங்கு ரஷ்ய பேண்ட் இசைக் குழுவான ‘பிக்னிக்’ குழுவின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென துப்பாக்கிக் குண்டுகள் பாய பலர் சரிந்து விழுந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியது மட்டுமல்லாது அரங்குக்கு பயங்கரவாதிகள் தீவைத்தும் சென்ள்ளனர்.

உடனடியாக தகவலறிந்த காவல், தீயணைப்பு, பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் இதுவரை 60 பேர் பலியாகியுள்ளதோடு 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புதின் அமோக வெற்றி பெற்றார். 200 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தொடர்ச்சியாக 3வது முறையாக ஜனாதிபதியாகி ஸ்டாலினின் சாதனையை முறியடித்திருந்தார். இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த கோரத் தாக்குதல் நடந்துள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்யாவுக்கு எதிராக ஐ.எஸ் அமைப்பு ஒன்று முன்னெடுக்கும் மிகப்பெரிய தாக்குதல் இதுவென்றே கூறப்படுகிறது.

 
கடந்த 2015ல் எகிப்தின் சினாய் பாலைவனத்தின் மீது 224 பேர்களுடன் பயணித்த ரஷ்ய விமானம் ஒன்று வெடித்துச் சிதறியது. அந்த தாக்குதலுக்கும் ஐ.எஸ் பொறுப்பேற்றதுடன், ஆதாரங்கலையும் வெளியிட்டது.

2017ல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கும் இஸ்லாமிய அமைப்பு ஒன்று பொறுப்பேற்றது.

 
மட்டுமின்றி, பல தசாப்தங்களாக நாட்டின் வடக்கு காகசஸ் பகுதியில் ரஷ்யப் படைகளுடன் இஸ்லாமிய போராளிக் குழுக்கள் சண்டையிட்டும் வருகின்றன. ஐ.எஸ் அமைப்பு உருவானபோது பெரும் எண்ணிக்கையிலான ரஷ்யர்கள் சிரியாவுக்கு சென்று அந்த அமைப்பில் இணைந்து கொண்டனர்.

 தற்போது மொஸ்கோ தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ISIS-K என்ற அமைப்பானது 2014 முதல் ஈரான், துர்க்மெனிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பரவலாக செயல்பட்டுவரும் குழுவாகும்.

 
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சித்துவந்துள்ள ISIS-K அமைப்பு, இஸ்லாமியர்களை அடிமைகளாக நடத்துவதாக ரஷ்யா மீது குற்றஞ்சாட்டியுள்ளது.

இதனிடையே, மொஸ்கோ மீதான தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே எச்சரித்ததாக வெள்ளைமாளிகை குறிப்பிட்டுள்ளது. ரஷ்ய அதிகாரிகளுடனும் உளவுத்தகவல்களை பகிர்ந்துகொண்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி இத்தாக்குதலை கண்டித்து எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “மாஸ்கோவில் நடந்த கொடூர பயங்கரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்காக பிரார்த்தனைகள். ரஷ்ய அரசாங்கத்துக்கும், மக்களுக்கும் இத்துயரமான தருணத்தில் இந்தியா துணை நிற்கிறது என்று பதிவிட்டுள்ளார்.