அமெரிக்காவின் திடீர் தாக்குதல்: ஹூதி கிளா்ச்சியாளா்கள் பலா் உயிரிழப்பு! செங்கடலில் பரபரப்பு

செங்கடலில் அமெரிக்க கடற்படையினர் ஹெலிகாப்டா்கள் சுட்டதில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் பலா் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதலானது பல மாதங்களாக தொடர்வதால் மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.

“செங்கடல் வழியாக இஸ்ரேலுக்குச் செல்லும் எந்தவொரு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்படும்” என ஹூதி கிளா்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில் அமெரிக்க கடற்படை ‘எக்ஸ்’ (டுவிட்டர்)தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளது.

''செங்கடலில் சிங்கப்பூா் கொடியுடன் வந்த சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தக் கப்பலை நோக்கி, யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து ஏவப்பட்ட 2 ஏவுகணைகளை அமெரிக்க கடற்படை கப்பல் சுட்டு வீழ்த்தியது.

இதையடுத்து அதே சரக்கு கப்பல் மீது 4 சிறிய படகுகளில் வந்த ஹூதி கிளா்ச்சியாளா்கள் துப்பாக்கிகளால் சுட்டனா்.

பின்னா் அவா்கள் கப்பலில் ஏற முயன்றனா். இதுகுறித்த தகவலின் அடிப்படையில், கிளா்ச்சியாளா்களுக்கு அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டா்கள் எச்சரிக்கை விடுத்தன.

ஆனால் ஹெலிகாப்டா்களை நோக்கி கிளா்ச்சியாளா்கள் சுட்டனா்.

இதைத்தொடா்ந்து தற்காப்புக்காக ஹெலிகாப்டா்கள் பதிலுக்கு சுட்டன. இதில் கிளா்ச்சியாளா்களின் 3 படகுகள் நீரில் மூழ்கி, அவா்களில் பலா் உயிரிழந்தனா். 4-ஆவது படகு தப்பிச் சென்றது” என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.