இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை முன்னெடுப்பதை தடுக்க முடியாது - டேவிட் கேமரூன்


 
பிரித்தானிய நிறுவனங்கள் இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை முன்னெடுப்பதை தடுக்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.

 காஸா மீது கடந்த ஆறு மாதங்களாக கடுமையான தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை அனுமதிக்கும் உரிமங்களை ரத்து செய்ய பிரதமர் ரிஷி சுனக்கின் அரசாங்கம் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.

 
இதனையடுத்து விளக்கமளித்துள்ள வெளிவிவகார அமைச்சர் டேவிட் கேமரூன்,
இஸ்ரேலுக்கான ஏற்றுமதி உரிமங்களில் பிரித்தானியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றார். இருப்பினும் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022ல் 53 மில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்களை பிரித்தானியா இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்த நிலையில், கடந்த வாரம் மூன்று முன்னாள் நீதிபதி உட்பட 600 சட்டத்துறை உறுப்பினர்கள் திரண்டு,

 காஸாவில் நடந்தேறும் இனப்படுகொலையில் பிரித்தானியாவை உடந்தையாக ஆக்க முடியும் என்று கூறி, இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

 
மட்டுமின்றி, ஏற்றுமதி உரிமங்களை ரத்து செய்யவும் சில அரசியல் தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். ஆனால் காஸா மீதான தாக்குதலில் தாங்கள் போர்க்குற்றம் அல்லது இனப்படுகொலை செய்ததாக இஸ்ரேல் மறுத்து வருகிறது.

இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதி நீடிக்கும் என அறிவித்துள்ள டேவிட் கேமரூன், காசாவில் மனிதாபிமான அணுகல் பிரச்சினை குறித்து பிரித்தானியா தொடர்ந்து தீவிர கவலை கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.