சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை

லித்தியம் விநியோகத்தில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில் புதிய ஒப்பந்தம் ஒன்றை இந்தியா மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்றைய தினம் (16) அர்ஜென்டினாவில் உள்ள லித்தியம் சுரங்கத்தில் இருந்து லித்தியம் அகழ்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவின் நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கையெழுத்திட்டார்.

மின்சார வாகனங்கள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மடிக்கணணிகளில் லித்தியம் மின்னேற்றிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால் குறித்த துறையுடன் சார்ந்தவர்களுக்கு லித்தியம் மிக முக்கியமான தேவையாக உள்ளது.

இதன் பொருட்டு, கடந்த 2020-21 ஆம் ஆண்டுகளில் இந்தியா இறக்குமதி செய்த லித்தியத்தில் பெரும்பகுதி சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து லித்தியம் விநியோகத்தில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில் அமெரிக்கா தலைமையில் தாது பாதுகாப்பு கூட்டு அமைப்பானது (எம்எஸ்பி) கடந்த 2021-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பில் அவுஸ்திரேலியா, இந்தியா, கனடா, பின்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், கொரியா, ஸ்வீடன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக இணைந்திருந்தனர்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவின் கானிஜ் பிதேஷ் நிறுவனமும், கேம்யென் என்ற நிறுவனமும் கூட்டாக இணைந்து லித்தியம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதன் விளைவாக அர்ஜென்டினாவின் கேட்டமர்கா மாகாணத்தில் 15,703 ஹெக்டேயரில் உள்ள 5 லித்தியம் சுரங்கத்தில் ஆய்வு மற்றும் லித்தியம் எடுக்கும் ஒப்பந்தத்தை சுமார் 200 கோடி ரூபா மதிப்பில் மேற்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் லித்தியம் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்பத்தைப் பெற உதவுகின்றது.

மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலமாக லித்தியம் விநியோகத்தை வலுப்படுத்த இந்தியாவுக்கு இது ஒரு வாய்ப்பாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.