இங்கிலாந்திலேயே அன்டன் பாலசிங்கம் போஷிக்கப்பட்டு வளர்க்கப்பட்டார்-விமல் வீரவங்ச

நாட்டில் அடுத்து ஏற்படும் போராட்டம் பட்டினியால் பாதிக்கப்பட்ட மக்கள் நடத்தும் போராட்டமாக இருக்கும் எனவும் அப்படியான அழிவின் ஊடாக நாட்டில் இருளான நிலைமைக்கு செல்வதை தவிர்க்கக் கூடிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

தேசிய சபை தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் நேற்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மக்களின் பட்டினி தொடர்பான பிரச்சினையை தீர்க்க உரிய அறிவியல் ரீதியான திட்டங்கள் இருக்க வேண்டும்.பட்டினியை போக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து அறிய மக்களுக்கு உரிமையுள்ளது.

அன்றாடம் சமாளிக்கும் வேலைத்திட்டங்களால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது.

நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதை விட பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்று மகாராணியின் இறுதிச்சடங்கில் கலந்துக்கொள்வது ஜனாதிபதிக்கு முக்கியமானதாக இருக்கின்றது. அவற்றுக்கு டொலர் இருக்கின்றது. ஏழு, எட்டு பேர் இங்கிலாந்து சென்றுள்ளனர்.

நான் அறிந்த வரையில் அயல் நாடான இந்தியாவில் இருந்து இந்திய ஜனாதிபதியின் பிரதிநிதியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து நாட்டின் தலைவரே சென்றுள்ளார். சென்றது குறித்து எனக்கு எந்த பிரச்சினையுமில்லை. ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் பிரித்தானிய கொடியும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் வீரபுரங்கப்பு கொல்லப்பட்டது சிறந்தது என்று கூறுகின்றோம். வெல்லஸ்ஸவில் எமது முன்னோர்களை கொன்றது நல்லது என்று நாங்கள் கூறுவதாக அமையும்.

எமது பிக்குமார் கொலை செய்யப்பட்டது நல்லது என்று நாம் கூறுவதாக அமையும். அரச நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் 1952 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை இலங்கையை ஆட்சி செய்த ராணி என எழுதப்பட்டுள்ளது.

இப்படியான மனநிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு எப்படி தீர்வு காண்பது. இங்கிலாந்திலேயே அன்டன் பாலசிங்கம் போஷிக்கப்பட்டு வளர்க்கப்பட்டார்.

அவர்களே ஜெனிவாவில் எமது படையினருக்கு எதிராக யோசனையை கொண்டு வருகின்றனர். அவர்களே எமது வரலாற்று சிறப்புமிக்க அறிவு களஞ்சியமான ஓலைச்சுவடிகளை கொள்ளையிட்டனர்.

அவர்களே மலைநாட்டில் காடுகளை அழித்து எடுத்துச் சென்றனர். அந்த வரலாறு தெரியாத, அந்த உணர்வு இல்லாதவர்கள் நாட்டை ஆட்சி செய்கின்றனர் என்றால் அப்படியானவர்களால் நாட்டை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுக்க முடியும் என்று எங்களால் நம்ப முடியாது எனவும் விமல் வீரவங்ச மேலும் தெரிவித்துள்ளார்.