செம்மணி மனித புதைகுழி அருகில் செய்மதிப்படம் மூலம், மனித புதைகுழி இருக்கலாமென சந்தேகிக்கப்படும் மற்றொரு பகுதி அகழ்வுப் பணிக்காக நேற்று புதன்கிழமை தயார் செய்யப்பட்ட நிலையில் இன்று வியாழக்கிழமை அங்கு அகழ்வுப் பணிள் ஆரம்பமாகியுள்ளன.
செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனைத் தெரிவித்தார்.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப்பணி நேற்றோடு 7 நாட்களை பூர்த்தி செய்கின்றன.
ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட 33 மனித எலும்பு கூட்டுத் தொகுதிகளோடு நேற்று செவ்வாய் கிழமை அகழ்வு செய்து துப்பரவாக்கப்பட்ட எலும்பு கூடுகளில் புதிதாக நான்கு முழுமையான எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு இலக்கமிடப்பட்டன.
இதுவரைக்கும் 30 முழுமையான எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன் குழப்பகரமான நிலையிலுள்ள முழுமையான நான்கு எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று முழு நாள்அகழ்வுப் பணிகள் இன்று காலை 7 மணியில் இருந்து மாலை வரை நடைபெறுகின்றன.
இதேநேரம் செம்மணி மனித புதைகுழி பகுதி அருகில் செய்மதிப்படம் மூலம் சந்தேகத்துக்கிடமான
பகுதியொன்று தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் அடையாளப்படுத்தப் பட்டு நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அங்கும் மனித உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாமென்று சந்தேகமுள்ளது.
அதன் அடிப்படையில் அந்தப் பகுதியை சுத்தப்படுத்தி அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான ஆரம்பகட்ட பணிகள் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்களின் பங்களிப்போடு அந்த பகுதி விசேடமாக பேராசிரியர் ராஜ் சோமா தேவாவினால் அகழ்வுப் பணிக்காக தயார் செய்யப்பட்டுள்ளது.