அண்ணாச்சிக்கு இது முதல் படமாக தெரியவில்லை- லெஜெண்ட் விமர்சனம்!

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘தி லெஜண்ட்’. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா முறையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் திரையரங்குகளில் நேற்று  வெளியானது.படத்தின் கதாநாயகனாக நடித்துள்ள சரவணனின் ரசிகர்கள் லெஜண்ட் படத்தை உற்சாகமாக கொண்டாடினர்.

ஒரு அன்பான எளிய மனிதன் தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி ‘ஒரு லெஜண்டாக’ எப்படி உருவாகிறான் என்ற கருத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கோபுரம் சினிமாஸ் ஜி என் அன்புச்செழியன் பெற்றிருக்கிறார். மேலும் தமிழ்நாடு முழுவதும் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் தி லெஜண்ட் திரைப்படம் நேற்று  வெளியானது.

திரையரங்குகள் முன்பு பேனர் வைத்தும், ஆள் உயர மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்து ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பல இடங்களில் ரசிகர்கள் மேள தாளத்துடன் சென்று படத்தை பார்த்து மகிழ்ந்தனர். காலை 4 மணிக்கு ரசிகர்கள் காட்சி தொடங்கியதும், பல திரையரங்குகளில் கூட்டம் அலைமோதியது.

படம் பார்த்து வெளியே வந்த பொதுமக்கள் சரவணன் முதன் முதலில் நடித்தது போன்று தெரியவில்லை என கூறினர். நடிப்பில் அசாத்திய திறமையை வெளிப்படுத்தியதாகவும், முன்னணி நடிகர்கள் நடித்து வெளிவரும் படங்களின் அளவிற்கு திரைப்படத்தை பார்த்த அனுபவம் உள்ளதாக கூறினர். சரவணனின் ரசிகர்கள் கூறும்போது, படத்தின் சண்டை காட்சிகளில் கதாநாயகன் தெறிக்க விட்டதாக தெரிவித்தனர்.

பாசம், அன்பு, கோபம் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடிகர் சரவணன் அசத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர். குடும்ப படமாக எடுக்கப்பட்டுள்ளதால் அனைவரும் பார்க்கலாம் என்றும் கண்டிப்பாக அனைவருக்கும் படம் பிடிக்கும் என்றும் ரசிகர்கள் தெரிவித்தனர்.