அமெரிக்க பாலத்தை அசுர வேகத்தில் தகர்த்த சிங்கப்பூர் கப்பல்! பலர் பலி என அச்சம்...

இன்று (26) அதிகாலை 1.30 மணியளவில் அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் அமைந்துள்ள பிரான்சிஸ் ஸ்கொட் பாலத்தின் ஒரு பகுதி விபத்துக்குள்ளாகி உடைந்து கடலுக்குள் வீழ்ந்தது.

இதன்போது பாலத்தில் சுமார் 4 வாகனங்கள்வரை இருந்ததாகத் கடற்படையினர் தெரிவித்துள்ள நிலையில், பல வாகனங்கள் பாலத்தில் விழுந்திருக்கலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் 20 பேர் வரை நீரில் மூழ்கியிருக்கலாம் என பால்டிமோர் நகர தீயணைப்புத் துறை தற்போது தெரிவித்துள்ளது.  

முதலாம் இணைப்பு  

அமெரிக்காவில் பால்டிமோர் பகுதியில் அமைந்துள்ள பிரான்சிஸ் ஸ்கொட் என்ற மிக நீளமான பாலத்தின் ஒரு பகுதி கப்பலொன்று மோதியதில் உடைந்து விபத்துக்குள்ளாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, இன்றைய தினம் (26) அதிகாலை வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூர் கொடியுடன் கூடிய டாலி என்ற சரக்கு கப்பலே இந்த பாலத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது, மோதிய வேகத்தில் பாலம் சிதைந்தது மாத்திரமன்றி கப்பலும் தீப்பற்றி கடலுக்குள் மூழ்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தவிரவும் குறித்த கப்பலானது பால்டிமோர் வழியே, இலங்கையின் கொழும்பு நகருக்கு சென்று கொண்டிருந்தது என கடற்படையைச் சேர்ந்த மத்யூ வெஸ்ட் என்பவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த விபத்தில், 2 கி.மீ. நீளம் கொண்ட பாலத்தின் ஒரு பகுதி இடிந்து நீருக்குள் விழுந்துள்ளது, இதனால் பாலத்தில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் நீரில் விழுந்ததாகவும், பாலத்தின் மீது மோதிய வேகத்தில் கப்பல் தீப்பிடித்து பின்னர் அது நீரில் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் இதுவரை காயமடைந்தவர்கள் தொடர்பான எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை என்றும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பால்டிமோர் நகர தீயணைப்பு துறையினரும், காவல் துறை அதிகாரிகளும் மீட்பு பணிகளை விரைந்து முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதுவரை நீரில் தத்தளிக்கும் 7 பேரை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்றும் அவர்கள் பாலத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் என்றும் தெரியவந்துள்ளது, தவிரவும் பாலத்திலிருந்து கீழே விழுந்த வாகனங்கள் மற்றும் ஏனையவர்களின் விவரம் முழுமையாக தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த விபத்தின் எதிரொலியாக, பாலத்தின் இருபுறமும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது மாத்திரமல்லாமல் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு, போக்குவரத்து வேறு பகுதிக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது என்று மேரிலாண்ட் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.