கிளிநொச்சி இந்துபுரத்தில் 65 குடும்பங்களின் காணிகளை வீடுகளுடன் அபகரிக்க, நீர்ப்பாசனத் திணைத்தினால் முயற்சிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனையடுத்து இந்துபுரம் கிராமத்திற்கு நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்த அபகரிப்பு முயற்சிதொடர்பில் ஆராய்ந்ததுடன், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் இந்த அடாவடிச் செயற்பாட்டிற்குத் தனது கடுமையான கண்டனங்களையும் தெரிவித்தார்.
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர்பிரிவிற்குட்பட்ட இந்துபுரம் கிராமத்தில் கடந்த 1977ஆம் ஆண்டு மக்கள் குடியேறி வசித்து வருகின்றனர்.
கடந்த 1993ஆம் ஆண்டு இந்துபுரம் கிராம மக்களின் காணிகளுக்கு அரச காணிஅனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் நில அளவைப் படிவங்கள் காணவில்லை என தெரிவித்து, கடந்த 2010ஆம் ஆண்டில் மீண்டும் இந்துபுரம் கிராம மக்களின் காணிகள் அளவீடுசெய்யப்பட்டு காணி அனுமதிப்பத்திரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
அதன்பிறகு குளத்திற்குரிய ஒதுக்கீட்டுக் காணிகள் அளவீடு செய்யப்பட்டு அவற்றுக்கு முறையாக எல்லைக்கற்கள் இடப்பட்டன.
மேலும் மக்களின் காணிகளும் அளவீடு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்ட அரச காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதுடன், தனியார் உறுதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு முறையாக அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு மக்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்ட தனியார் உறுதி மற்றும், அரசகாணி அனுமதிப்பத்திரங்களுள்ள காணிகளையே கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களம் மீண்டும் அளவீடுசெய்து, எல்லைக்கற்களையிட்டு அபகரிக்க முயற்சி செய்வதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.