எல்ல - பஸ் விபத்து - விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது



எல்ல - வெல்லவாய பஸ் விபத்து குறித்த விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில் பல அதிர்ச்சியூட்டும் விடயங்கள் வெளியாகியள்ளது.
குறித்த அறிக்கை நேற்று (22) மாலை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் நான்காம் திகதி பதுளை எல்ல - வெல்லவாய வீதியில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்ததுடன் 17 பேர் படுகாயமடைந்தனர்.

தங்காலை நகராட்சிமன்றத்தின் செயலாளர் மற்றும் நுவரெலியா, ஹப்புத்தளை மற்றும் எல்ல ஆகிய இடங்களில் சுற்றுலா சென்றுவிட்டு தங்காலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த 30 ஊழியர்கள் இந்த விபத்தில் சிக்கியிருந்தனர்.
இந்தநிலையில், போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் மோட்டார் போக்குவரத்து ஆணையர் ஜெனரல் கமல் அமரசிங்க, நாட்டையே உலுக்கிய விபத்து குறித்து விசாரிக்க எல்ல பகுதிக்கு சிறப்பு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குழ அனுப்பப்பட்டது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை பற்றிய அறிக்கை நேற்று (22) பிமல் ரத்நாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டது.

சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் படி,  
எல்ல - வெல்லவாய வீதியில் உள்ள வீதி அடையாளங்கள் மற்றும் பிற எச்சரிக்கை அடையாளங்கள், ஒரு அறிமுகமில்லாத ஓட்டுநர், வீதியின் ஆபத்தான தன்மையைப் புரிந்துகொள்ள போதுமானதாக இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

அத்தோடு, பேருந்தை ஆய்வு செய்தபோது பேருந்தின் அடையாளம் சந்தேகத்திற்குரியதாக இருந்ததாகவும் பேருந்தின் சேசிஸ் எண் (சுநபளைவசயவழைn ரெஅடிநச), நிறம் மற்றும் பதிவுச் சான்றிதழ் ஆகியவை மோட்டார் வாகனத் துறையின் தரவுத்தளத்துடன் பொருந்தவில்லை எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பேருந்தின் உடலை உள்ளடக்கிய நீல நிற பின்புறத்தில் வெவ்வேறு வண்ணப் படங்கள் கொண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்துள்ளன.

அத்துடன், பேருந்தின் பிரேக் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் அவை பொருத்தமற்ற நிலையில் காணப்பட்டதாகவும் முறையான பராமரிப்பற்ற நிலையில் கிரீஸ் பதிந்து இருந்ததாகவும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளு;ளது.
 

பின்புற வலது பிரேக்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முன் மற்றும் பின் இடது பிரேக்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதாலும், தடுப்புக்களில் இருந்த மூன்று சக்கரங்களின் டிரம்கள் அதிக வெப்பமடைந்ததாலும், இறங்கும்போது பிரேக்கை அதிகமாகப் பயன்படுத்தியதாலும் தடுப்புக்கள் செயலிழந்ததாலும் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.


அத்துடன், பேருந்தின் பராமரிப்புப் பணியின் போது சக்கரங்களில் பொருத்தப்பட்ட டயல் பிளேட்டுகள் அகற்றப்பட்டபோது, வீதியிலிருந்த் இருந்து தண்ணீர் மற்றும் மணல் டிரம்களில் நுழைந்தது பிரேக் செயலிழந்ததற்கான மற்றொரு காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விபத்துக்கு முன்னர் இந்தப் பேருந்து இருந்த கட்டமைப்பு ஆராயப்பட்ட போது, பல்வேறு வண்ண விளக்குகள், வெள்ளை உலோக பாகங்கள், ஒலி அமைப்புகள் மற்றும் ஸ்டிக்கர்கள் போன்ற அங்கீகரிக்கப்படாத மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கின்றது.

அதேவேளை, பேருந்தின் சாரதியாக பணியாற்றிய நபர், விபத்துக்கு முதல் நாள் மற்றும் அதாவது செப்டெம்பர் மூன்றாம் திகதி காலை ஒன்பது மணியளவில் நிறுவனத்திற்குச் சொந்தமான காரில் கொழும்புக்கு பயணித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.


பின்னர் இரவு ஒன்பது மணியளவில் வாகனத்தை ஒப்படைத்துவிட்டு விபத்துக்குள்ளான பேருந்தை மூன்றாம் திகதி இரவு 11 மணியளவில் பொறுப்பேற்று அங்குணகொலபெலஸ்ஸவிலிருந்து பேருந்தை எடுத்து தங்காலை நகராட்சிமன்ற மைதானத்திற்கு சென்றுள்ளார்.

தொடர்ந்து நான்காம் திகதி அதிகாலை 2.30 மணியளவில், அம்பலாந்தோட்டையைச் சேர்ந்த தங்காலை நகராட்சி மன்றச் செயலாளர் ரூபசேனவின் வீட்டிற்குச் சென்று தங்காலை நகராட்சி மன்ற மைதானத்திற்குத் திரும்பியுள்ளார்.

இதன்பின்பு, அதிகாலை 3.30 மணிக்கு தங்காலை நகராட்சி மன்ற ஊழியர்களுடன் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.


தொடர்ந்து வாகனத்தை செலுத்தி சென்றுள்ள சாரதி முதல் நாளில் இருந்து போதியளவு ஓய்வு இன்றி இருந்துள்ளமையும் தொடர்ந்து வேலையில் ஈடுபட்டிருந்தமையும் இந்த விபத்துக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை கருத்தில் கொண்டு, விபத்தில் சிக்கிய பேருந்தின் ஓட்டுநர் சரியான ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து வாகனம் ஓட்டி வந்ததாகவும் மற்றும் ஓட்டுநர் 37 மணி நேரத்தில் எடுக்க வேண்டிய 10 மணி நேர ஓய்வை எடுக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

இதன்படி, இந்தப் பேருந்தின் ஓட்டுநர் மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தை மீறியுள்ளதாகவும் மற்றும் சுற்றுலா ஏற்பாட்டாளர்களும் இதற்கு உதவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகப் பராமரிப்பாளரும் சுற்றுலாவிற்கு ஒரே ஒரு ஓட்டுநரை மட்டுமே வாகனத்திற்கு வழங்குவதன் மூலம் இந்த மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தை மீறியதாகவும் விசாரணைகளில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி, விபத்துக்கு சில நாட்களுக்கு முன்பு, ஓகஸ்ட் 28 ஆம் திகதி அல்லது அதற்குள், இந்தப் பேருந்தின் உரிமையாளர் இந்த பேருந்தை பல பயணங்களுக்கு எடுத்துச் சென்றதாகக் கூறியிருந்தாலும், நீண்ட காலமாகப் பின்பக்க வலது சக்கரத்தில் கிரீஸ் கசிவு மற்றும் தேய்ந்த பிரேக் போன்ற மோசமான பராமரிப்புக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.