முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொள்ளவுள்ள அக்கினஸ் அம்மையார்

சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆணையாளர் அக்கினஸ் அம்மையார் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொள்வதற்காக இலங்கை வருகின்றார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் (G.Srinesan) தெரிவித்தார்.

மட்டக்களப்பு (Batticaloa) நகர் சுமைதாங்கி சந்தியில் இன்று (14.05.2024) செவ்வாய்கிழமை இடம்பெற்ற கஞ்சிவழங்கும் செயற்பாட்டில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“நாங்கள் நஞ்சை கொடுக்கவில்லை. கஞ்சி கொடுக்கின்றோம். அதனை மக்கள் அருந்துவதற்கு உடன்பாடாக இருந்தார்கள். ஆனால், மக்களை விடாது பொலிஸார் இரு வீதியருகில் நின்று கொண்டு தடுத்துக் கொண்டிருந்தனர்.

சம உரிமை, மத உரிமை, வழிபாட்டு உரிமை மற்றும் இறந்த அல்லது கொல்லப்பட்ட ஆத்மாக்களை நினைவு கூறும் உரிமை சகலருக்கும் இருக்கின்றது. இதனை தடுக்க எவருக்கும் உரிமையில்லை.

எங்களுடைய ஆத்மாக்களின் சாந்திவேண்டி நாங்கள் அஞ்சலி செய்வதற்கு உரிமை மறுக்கப்படுகின்றது என்றால் இந்த நாட்டில் மனித உரிமை என்பது தலைகீழாக பேணப்படுகின்றது” என தெரிவித்துள்ளார்