நாட்டிற்கு பெருமை சேர்த்த முல்லை பெண் அகிலத்திருநாயகிக்கு கௌரவிப்பு!

பிலிப்பைன்ஸில் அண்மையில் நடைபெற்ற தேசிய மாஸ்டர்ஸ், சிரேஷ்ட தடகள வீரர்கள் விளையாட்டுப் போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட  முல்லைத்தீவு முள்ளியவளைச் சேர்ந்த அகிலத்திருநாயகி (ஓய்வு பெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தர்) இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இவ்வாறு தடகள போட்டியில் உலகளவில் இலங்கைக்கு பெருமை சேர்த்த முல்லைத்தீவு மாவட்ட பெண்மணியினை கௌரவப்படுத்தும் நிகழ்வு ஒன்று இன்று (24.11.2023) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

500 மீற்றர் நெடுந்தூர ஓட்டம், 5,000 மீற்றர் நெடுந்தூர விரைவு நடை ஆகிய போட்டிகளில் முதலிடம்பெற்று தங்கப் பதக்கங்களையும், 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும், 5,000 மீற்றர் நெடுந்தூர ஓட்டத்தில் நான்காமிடத்தையும் அகிலத்திருநாயகி பெற்றுக் கொண்டுள்ளார்.

மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் வீரப்பெண்மணி அகிலத்திருநாயகிக்கு மலர்மாலை அணிவித்து அழைத்துவரப்பட்டு பண்டரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் கௌரவ நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதன் போது அகிலத்திருநாயகி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளதுடன் நினைவு படமும் வழங்கி வைக்கப்பபட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் உள்ளிட்ட மாவட்ட செயலக திணைக்கள அதிகாரிகள் விளையாட்டு திணைக்கள அதிகரிகள் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளார்கள்.

இந்த நிகழ்வில் கொடையாளர் ஒருவரினால் அகிலத்திருநாயகிக்கு 25 ஆயிரம் ரூபா பணப்பரிசிலும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.