ரயில் முன் தள்ளி கல்லூரி மாணவியான சத்யாவை கொலை செய்த சதீஷை உடனடியாக தண்டிக்க வேண்டும் என நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. தனது தனித்துவமான இசையமைப்பால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர். சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை போதிக்கும் பல படங்களைத் தந்த இவர், சமூக வலைதளங்களிலும் தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
அண்மையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டால் சமாதானம் செய்ய அடுத்தவரை கூப்பிட வேண்டாம் என பதிவிட்டிருந்தார். சென்னையில் காதல் விவகாரத்தில், பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியான சத்யா, ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேலும் அம்மாணவியின் தந்தையும் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ”சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.