ஆதிலிங்கம் உடைக்கப்பட்டதன் பின்னணியில் அரசே - யாழில் இடித்துரைப்பு


வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு அரசினுடைய பின்னணி இருப்பது தெட்டத்தெளிவாகத் தெரிகிறது என யாழ்.மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் காடையர்களால் சிதைக்கப்பட்டிருக்கிறது. இந்த செயற்பாடானது முற்று முழுதாக மத பிரிவினைவாதத்தை இங்கு தூண்டி அதில் குளிர்காய எடுக்கப்படுகின்ற ஒரு அரசியல் கலந்த நடவடிக்கையாகவே நாங்கள் இதனைப் பார்க்கின்றோம்.

இந்த சம்பவத்தோடு தொடர்புடைய நபர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். எங்களைப் பொறுத்த வரையில் இதற்குப் பின்னணியில் அரசாங்கமும் அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கக்கூடிய ராணுவ கட்டமைப்புகளும் இதற்கு துணை இருப்பதாகவே நாங்கள் கருதுகின்றோம்.

இந்த சம்பவத்துக்கு எங்களுடைய வன்மையான கண்டனங்களை நாங்கள் பதிவு செய்கின்றோம். இந்த நாடு மத சகிப்புத்தன்மையற்ற திசையை நோக்கி சென்று கொண்டிருப்பதை குறிப்பாக இது எடுத்துக்காட்டுகின்றது.

எங்களைப் பொறுத்தவரையில் இது எங்களுடைய பண்பாடுகளை சிதைத்து அழிக்கின்ற, எங்களுடைய கட்டமைப்புகளை சிதைத்து அழிக்கின்ற ஒரு இன அழிப்பின் அங்கமாக தான் இதனை பார்க்கின்றோம்.

இவ்வாறான சம்பவங்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதனோடு தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். மீண்டும் அந்த இடத்திலேயே ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் உருவாக்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கையாக இருக்கின்றது.

இந்த ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கின்ற பகுதி முழுக்க முழுக்க ராணுவத்தினுடைய கட்டுப்பாட்டுக்குள் உயர் பாதுகாப்பு வலையம் போன்று காட்சி தருகின்ற ஒரு பிரதேசமாக இருக்கின்றது. அதைவிட தொல்லியல் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ், கட்டுப்பாட்டின் கீழ் இந்த பிரதேசம் இருக்கின்றது.

இந்த சந்தர்ப்பத்திலே இதை வேற யாரும் ஒரு சாதாரண பொது மகனால் செய்து விட முடியாது. ஆகவே இந்த சம்பவத்திற்கு அரசினுடைய பின்னணி இருப்பது தெட்டத்தெளிவாகத் தெரிகிறது,  இந்த விடையத்தில் உலக நாடுகள் உடனடியாக தலையிட்டு தமிழ் மக்களுடைய பண்பாட்டு சிதைவை தடுத்து நிறுத்துவதற்கு காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்தோடு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாக சபையினால் வவுனியிவில் எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்பட இருக்கின்ற போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு இந்த போராட்டத்தை வெற்றி பெறச் செய்யவேண்டும்.

மீண்டும் எங்களுடைய பண்பாடுகள், எங்களுடைய வரலாறுகள் சிதைக்கப்படாதவாறு ஒரு தடுப்பை நாங்கள் போட வேண்டுமாக இருந்தால் இவ்வாறான சம்பவங்களுக்கு எதிராக மிக காத்திரமான பிரதிபலிப்பை எங்களுடைய சமூகம் வெளிபடுத்த வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் அன்போடும் உரிமையோடும் எங்களுடைய மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.