இலங்கையில் போலி வைத்தியர்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை - வெளியான முக்கிய அறிவிப்பு...!


 
போலி சான்றிதழ்களை காட்டி மருத்துவ நிலையங்களை நடத்தும் போலி வைத்தியர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர், போலி வைத்திய நிலையங்களை நடத்தும் நபர்களை கைது செய்வதற்கு விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறிப்பாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வைத்தியர்களுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ இலச்சினையுடன் கூடிய ஸ்டிக்கரை வாகனங்களில் தவறாக பயன்படுத்துவோர் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர், நெடுஞ்சாலையில் போலி சான்றிதழ்களை வழங்குவது, இலவச மருந்துகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர்.

போலி சான்றிதழ்களை வழங்கி வைத்தியர்களாக நடித்து மருத்துவ நிலையங்களை நடத்துபவர்கள் மற்றும் வைத்தியர்கள் போல் வேடமணிந்து சில சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதேநேரம் நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியாக அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்கள் தனியார் மருந்தகங்களில் அதிகளவு விலைகளில் மாற்று மருந்துகளை பெற்றுக்கொள்ள வேண்டி நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.நாட்டில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடு காரணமாகவே இந்தநிலைமை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அதிக மருந்து பற்றாக்குறை காணப்படுவதாக நோயாளிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்

மேலும், தனியார் மருந்தகங்களில் மருந்துகளை கொள்வனவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதால் பொருளாதார ரீதியில் பின் தங்கிய நிலையிலுள்ள நோயாளிகளுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.