இந்திய - பாகிஸ்தான் உச்சக்கட்ட முறுகல் - இந்திய அரசின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு
பாகிஸ்தானுக்கு சொந்தமான மற்றும் பாகிஸ்தான் நிறுவனங்களால் இயக்கப்படும் அனைத்து விமானங்களும் தனது வான் பரப்பிற்குள் நுழைய இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி ஜம்மு - காஷ்மீரின் பஹால்காம் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்தியா – பாகிஸ்தான் இடையில் 1960 ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய அரசு கடந்த 23 ஆம் திகதி அறிவித்தது. அதனை தொடர்ந்து 24 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியது.
பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்தும் வரை இந்த தடை நடைமுறையில் இருக்கும் என்றும் இந்திய அரசாங்கம் அறிவித்தது.
பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இந்திய ஆயுதப்படைகளுக்கு "முழுமையான செயல்பாட்டு சுதந்திரத்தை" வழங்கினார்.
இந்நிலையில், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை விதித்து இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அடுத்த கட்ட புதிய நடவடிக்கையாக பாகிஸ்தான் விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு இந்தியா தனது வான்வழியை மூடியது.
பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட விமானங்களுக்கும், பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களால் இயக்கப்படும், சொந்தமான அல்லது குத்தகைக்கு விடப்பட்ட விமானங்களுக்கும் இந்திய வான்வெளி மூடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிற கிழக்கு ஆசிய நாடுகளுக்கான விமானங்களுக்கு பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தி வருகின்ற இதேவேளை, அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா இராணுவத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்லாமாபாத்திற்கு “நம்பகமான உளவுத்துறை” தகவல் கிடைத்துள்ளதாக பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிராந்தியத்தில் ஏற்படும் எந்தவொரு கடுமையான விளைவுகளுக்கும் இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என்றும் அதாவுல்லாஹ் தரார் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அதாவுல்லாஹ் தரார் புதன்கிழமை அதிகாலை வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் இவ்வாறு கூறியுள்ளார்.