உருமாறிய கொரோனா வைரசுக்கும் ஏற்றவகையில் ஒரு தடுப்பூசி!

சீனாவின் வுகான் நகரத்தில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகின்றது.ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஒமிக்ரோன் என தொடர்ந்து கொரோனா வைரஸ் உருமாறி வருவது அறிவியல் உலகத்தை அதிரவைத்துள்ளது.தற்போது உள்ள தடுப்பூசிகள் கொரோனாவின் உருமாறிய வைரஸ்களுக்கு எதிராக செயல்படுமா என்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலம், அசன்சோல் காஜி நஸ்ருல் பல்கலைக்கழகம் மற்றும் ஒடிசா மாநிலம், புவனேசுவரம் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் விஞ்ஞானிகளும் இணைந்து அனைத்து வகை உருமாறிய கொரோனா வைரசுக்கும் ஏற்றவகையில் ஒரு தடுப்பூசியை உருவாக்கி வருவதாக அறிவித்துள்ளனர்.இதுபற்றிய ஆராய்ச்சி தகவல்களை ‘மோலிகுலர் லிகுயிட்ஸ்’ பத்திரிகையில் வெளியிட ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.குறித்த தடுப்பூசியை உருவாக்கியுள்ள ஆராய்ச்சி விஞ்ஞானிகள் அபிக்யான் சவுத்ரி, சுப்ரபாத் முகர்ஜி, பார்த்தசாரதி சென்குப்தா, சரோஜ்குமார் பாண்டா, மலாய்குமார் ராணா ஆகியோர் கருத்து வெளியிடும் போது,“எங்களது ஆராய்ச்சியில் ‘எபிடோப் மல்டி டார்கெட் சைமெரிக் பெப்டைட்டை’ வடிவமைக்க நோய் எதிர்ப்பு தகவல் அணுகுமுறையை பயன்படுத்தினோம்.இது எச்கோவ்-229இ, எச்கோவ்-எச்கு1, எச்கோவ்-ஓசி43, சார்ஸ்-கோவ், மெர்ஸ்-கோவ், சார்ஸ்-கோவ்2 ஆகிய 6 வைரஸ் உறுப்பினர்களுக்கு எதிராக பாதுகாப்பு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும்.தற்போது வடிவமைத்துள்ள தடுப்பூசி மிகவும் நிலையானது. இது ஆன்டிஜெனிக் மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் கொண்டதாகும்.கணக்கீட்டு முறையைப் பயன்படுத்தி இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.அடுத்தகட்டமாக தடுப்பூசி தயாரிப்பு வந்துவிடும். அதைத்தொடர்ந்து சோதனை நடத்தலாம்.ஏனைய தடுப்பூசிகளைப் போல அல்லாமல், டிஎல்ஆர்4 எனப்படும் புரதத்துடன் அதிக பிணைப்பு வலிமையைக் காட்டிய பிறகு அடையாளம் காணப் பட்டவை தேர்ந்தெடுக்கப்பட்டன.அதே புரதம் உடலில் சார்ஸ் கோவ்-2 வைரஸ்களைக் கண்டறிந்து, நோய் எதிர்ப்பு பதிலளிப்புகளை தொடங்குவதற்கு பொறுப்பாகும்.இந்த தடுப்பூசி வகையானது ஒரே நேரத்தில் அனைத்து கொரோனா வைரஸ் குடும்ப வைரஸ்களையும் சமாளிக்க ஏற்றது. உலகில் வேறெங்கும் இப்படி ஒரு தடுப்பூசி உருவாக்கப்படவில்லை.“ எனத் தெரிவித்துள்ளனர்.