வெளிநாட்டு மோகத்தால் யாழ்ப்பாண இளைஞனுக்கு நேர்ந்த சோகம்

ஐரோப்பிய நாட்டிற்கு செல்லும் இலக்குடன் முகவர் ஒருவரை நம்பிச் சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் லெபனானில் சிறைவைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

யாழ் கொழும்புத்துறையை சேர்ந்த குறித்த குடும்பஸ்தரை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவருவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் உருக்கமான கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் பின்னர் கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் மோகம் தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள இளைஞர், யுவதிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.

எனினும் சட்டவிரோதமான முறைகள் ஊடாக முகவர்களை நம்பிச் சென்ற இருவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், முகவரை நம்பி பிரான்ஸ் செல்வதற்காக சென்ற தமிழர் ஒருவர் லெபனானில் சிறைவைக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

கொழும்புத்துறை வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் சயந்தன் என்ற இளம் குடும்பஸ்தரே முகவரால் ஏமாற்றப்பட்ட நிலையில், லெபனான் நாட்டிலுள்ள சிறையில் சிக்கியுள்ளார்.

பிரான்சிற்கு செல்வதற்கு முகவர் ஒருவரை நம்பி விமானம் மூலம் வெவ்வேறு நாடுகளுக்கு சென்ற கணவர், இறுதியாக லெபனான் ஊடாக பிரான்ஸ் செல்வதற்கு முயன்ற போது கைதுசெய்யப்பட்டதாக புவனேஸ்வரன் சயந்தனின் மனைவி கூறியுள்ளார்.

உரிய ஆவணங்கள் இல்லை என்பதற்காக கைது செய்யப்பட்டு கணவன் லெபனான் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடும்ப வறுமை காரணமாக பிரான்ஸ் செல்வதற்காக தனது கணவர் கடந்த ஜுன் மாதம் இலங்கையில் இருந்து புறப்பட்டார் எனவும் கடந்த ஐந்து மாதங்களாக லெபனான் நாட்டின் சிறையில் அவர் உள்ளதாகவும் மனைவி கூறியுள்ளார்.

லெபனான் அருகில் உள்ள இஸ்ரேலில் யுத்தம் இடம்பெறுவதால் தாம் அச்சமடைந்துள்ளதாகவும் தனது கணவரை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவருவதற்கு உரிய தரப்புக்கள் உதவ வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.