ஹமாஸ் அமைப்பிற்கு பேரிழப்பு : வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு



ஹமாஸ் அமைப்பிற்கு ஏற்பட்ட பேரிழப்பு தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகளின் தளபதி முகமது தீஃப்(Mohammed Deif), மூத்த தலைவர்கள் மர்வான் இசா(Marwan Issa), காசி அபு தமா'ஆ(Ghazi Abu Tama'a), ரேத் தாபெட்(Raed Thabe) மற்றும் ரஃபா சலாமா (Rafa Salama) ஆகியோரின் மரணத்தை ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா (Abu Obaida) உறுதிப்படுத்தியுள்ளார்.

முகமது தீஃப்பின் மரணம் பாலஸ்தீன மக்களுக்கும் பரந்த அரபு மற்றும் முஸ்லிம் உலகிற்கும் ஒரு பேரிழப்பு என்று ஒபைடா தெரிவித்துள்ளார்.

"அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகளின் தலைமைத் தளபதி முகமது தீஃப்பின் தியாகத்தை எங்களுடைய மக்களுக்கு நாங்கள் பெருமையுடன் அறிவிக்கிறோம்," என்று அபு ஒபைடா தெரிவித்துள்ளார்.


இதேவேளை இஸ்ரேல் இராணுவம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முகமது தீஃப்பைக் கொன்றதாகக் கூறியது, ஆனால் ஹமாஸ் இதனை உறுதிப்படுத்தாமல் மொளனம் காத்து வந்தது.
 

தெற்கு இஸ்ரேலில் ஒக்டோபர் 7 ஆம் திகதி நடந்த தாக்குதல்களைத் திட்டமிட்டதற்கு காரணமான நபர்களில் முகமது தீஃப் ஒருவரென இஸ்ரேல் கூறுகிறது, அதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.


காசாவில் ஹமாஸ் குழுவின் தலைவரான யஹ்யா சின்வாருக்குப் பிறகு, காசாவில் இரண்டாவது இடத்தில் உள்ள ஹமாஸ் தளபதியாக முகமது தீஃப் பரவலாகக் காணப்பட்டார், அவர் கடந்த ஆண்டு இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் கடந்த ஆண்டு இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோருடன் சேர்ந்து முகமது தீஃப்க்கு பிடியாணை பிறப்பித்தனர்.

ஹமாஸ் போராளிகள் காசாவிலிருந்து இஸ்ரேலுக்குள் நுழைய அனுமதிக்கும் சுரங்கப்பாதைகளை நிர்மாணிப்பதில் முகமது தீஃப் உதவியதாக அறியப்படுகிறது.

ஹமாஸின் கையொப்ப ஆயுதமான கஸ்ஸாம் ரொக்கெட்டை வடிவமைத்த பெருமையும் அவருக்கு உண்டு.