உலக சுகாதார அமைப்பின் தலையீட்டில் காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம்


காசாவில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்காக உலக சுகாதார அமைப்பின் தலையீட்டின் பேரில் ஹமாஸ் - இஸ்ரேல் இடைக்கால போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில், இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து காசாவில் வான்வழி, தரைவழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

 
இதனால் இதுவரை குழந்தைகள், பெண்கள் உட்பட 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் காசாவில் பலியாகியுள்ளனர்.

 
இந்த போரை நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.
 
இந்நிலையில் காசாவில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிப்பதற்காக இடைக்கால போர் நிறுத்தம் செய்யும்படி உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டது.
   
இதற்கு இஸ்ரேலும், ஹமாஸ{ம் சம்மதம் தெரிவித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 3 நாட்களுக்கு தினசரி காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை போரை நிறுத்திவைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இதை பயன்படுத்தி குழந்தைகளுக்கு முதற் சுற்று போலியோ மருந்து வழங்க உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டு வருகிறது