மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை சரிந்து 9 பேர் பலி

மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை சரிந்து விபத்துக்குள்ளானதில்   குழந்தை ஒன்று உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மெக்சிகோவில் எதிர்வரும் ஜூன் 2ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு மாகாணமான நியூவோ லியோனில் உள்ள சான் பெட்ரோ கார்சா கார்சியா நகரில் நேற்று பலத்த காற்று வீசியது.
அப்போது, குடிமக்கள் இயக்கம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஜோர்ஜ் அல்வாரெஸ் மைனெசின் பிரசார நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடை அமைப்புகள் சரிந்து விழுந்தன.
இந்த இடிபாடுகளில் சிக்கி  குழந்தை உட்;பட 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இடிபாடுகளில் படுகாயமடைந்தவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழு மற்றும் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக வேட்பாளர் ஜோர்ஜ் அல்வாரெஸ் மைனெஸ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், "இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் தனது குழு உறுப்பினர்களும் படுகாயமடைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்துக்கு சென்று கொண்டிருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.