கடந்த 5 நாட்களில் 700 பேர் பலி : கொங்கோவில் அதிர்ச்சி



கொங்கோ குடியரசின் மிகப்பெரிய நகரமான கோமாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் இடம்பெற்று வரும் கடுமையான மோதலில் 700 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
 
ரூவாண்டாவின் ஆதரவுடன் இயங்கும் எம்.23 கிளர்ச்சி படையினர் வடக்கு கிவு மாகாணத்தின் தலைநகரைக் கைப்பற்றியதை அடுத்து அங்கு மோதல் அதிகரித்துள்ளது.
 
இந்தநிலையில் அங்கு சுமார் 2,300 பேர் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
 
கிளர்ச்சியாளர்கள் தெற்கு கிவுவின் தலைநகரான புகாவு பகுதியை நோக்கி நகர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
1990ஆம் ஆண்டு முதல் கொங்கோ குடியரசில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக மோதல் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.