அமெரிக்காவில் எட்டுபேர் சுட்டுக்கொலை : தாக்குதல்தாரி தப்பியோட்டம்

அமெரிக்காவின் சிகாகோ அருகே உள்ள இல்லினாய்ஸ் மாநிலத்தில் இரண்டு வீடுகளில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. 

அதன்படி, நேற்றைய தினம் (22) கண்டெடுக்கப்பட்ட சடலங்களில் ஒரு வீட்டிலிருந்து ஐவரும் மற்றைய வீட்டில் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர், நேற்று முன்தினம் (21) வேறொரு பகுதியில் வைத்து சுமார் 42 வயது மதிக்கத்தக்க ஒருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிகாகோ அருகில் உள்ள இல்லினாய்ஸ் மாநிலத்தின் ஜோலியட் என்ற பகுதியில் திடீரென வாலிபர் ஒருவர் இரண்டு வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

எதிர்பாராத வேளையில் நடந்த இந்தத் தாக்குதலுக்கு இலக்காகி ஏழு பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளனர் என காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர், 23 வயதுடைய ரோமியோ நான்ஸ் என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், இந்த ரோமியோ நான்ஸ்,  துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு சிவப்பு நிற டொயோட்டா காம்ரி காரில் தப்பியோடியுள்ளதாகவும் கையில் ஆயுதங்களுடன் உள்ள அவர் ஆபத்தானவர் எனவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

தவிரவும் தப்பியிடியுள்ள நான்ஸ் மற்றும் அவருடைய கார் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்குமாறும் காவல்துறையினரின் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு வன்முறை சம்பவம் அதிகரித்து வருகிறது.