இஸ்லாமியர்களின் புனித தலமான மக்காவில் ஹஜ் யாத்திரை மேற்கொண்ட பயணிகள் பலர் வெப்ப அலை காரணமாக சுருண்டு விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போனதாக கூறப்படும் ஹஜ் யாத்ரீகர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைகளைத் தேடிச் சென்று விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கடும் வெப்பம் காரணமாக இறப்பு எண்ணிக்கை 650 கடந்துள்ளதாகவும், 2.700 பயணிகள் வெப்பம் தொடர்பான பாதிப்புகளால் சிகிச்சை நாடியுள்ளதாகவும் உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் அதிகபட்சமாக 300க்கும் மேற்பட்ட எகிப்து நாட்டவர்கள் வெப்பம் தொடர்பான பாதிப்பினால் உயிரிழந்திருப்பதாக இரு இராஜதந்திரிகள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர்.
மக்காவில் உள்ள பெரிய பள்ளிவாசலில் கடந்த திங்கட்கிழமை (17) 51.8 பாகை செல்சியஸ் வெப்பம் பதிவானதாக சவூதி அரேபிய வானிலை ஆய்வு மையம் கூறியது.
இந்த ஆண்டு உலகெங்கிலும் இருந்து 1.8 மில்லியன் மக்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் சவுதி அரேபியாவில் இருந்து வெளியான ஆய்வறிக்கை ஒன்றில்,
ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் மக்கா பகுதியில் வெப்பநிலை 0.4 செல்சியஸ் அதிகரிப்பதாக உறுதி செய்துள்ளனர்.
பல யாத்ரீகர்கள், குறிப்பாக வயதானவர்கள், வெப்பத்தின் காரணமாக சுருண்டு விழுந்துள்ளதாகவும், மருத்துவ உதவி நாடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.