காசாவில் 576,000 பேர் பஞ்சத்தின் விளிம்பில் - ஐ.நா. எச்சரிக்கை


காசா போர் தற்போது ஆறு மாதங்களை தொட்டிருப்பதோடு அங்குள்ள மக்கள் தொகையில் கால் பங்கினராக குறைந்தது 576,000 பேர் பஞ்சத்தின் விளிம்பை தொட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குறிப்பிடுள்ளது.

இதனையடுத்து காசாவுக்கு மேலும் உதவிகளை அனுமதிக்குமாறு இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

காசா எல்லைக் கடவைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இஸ்ரேல், போர் வெடித்தது தொடக்கம் ஒரே ஒரு வாயிலை மாத்திரம் திறந்து வைத்துள்ளது. அங்கு கடுமையான சோதனைகள் மற்றும் கெடுபிடிகளுக்கு பின்னரே உதவி வாகனங்கள் காசாவுக்குள் நுழைய முடியுமாக இருப்பதாக ஐ.நா நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.


இந்நிலையில் கடல் வழியாக உதவிகளை விநியோகிப்பதற்கு சைப்ரஸில் இருந்து முதலாவது உதவிக் கப்பல் ஒன்று காசாவை நோக்கி பயணித்திருப்பதோடு காசாவில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. மறுபுறம் அமெரிக்கா உட்பட பல நாடுகளும் வானில் இருந்து காசாவுக்கு உணவு உதவிகளை போட்டு வருகின்றன.

எவ்வாறாயினும் தரை வழியான உதவி விநியோகமே செயல்திறன் மிக்கதாகவும் பொருத்தமானதாகவும் இருப்பதாக தொண்டு அமைப்புகள் கூறுகின்றன.

கடந்த மாதம் தென்மேற்கு காசா நகரில் ரஷீட் வீதியில் உணவு உதவிக்காக கூடிய பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 118 பேர் கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.

இதேவேளை 200 தொன் உணவு உதவியுடன் காசா பயணித்திருக்கும் உதவிக் கப்பல் தற்போது காசா கடற்கரை தெரியும் தூரத்தை எட்டி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஸ்பெயின் தொண்டு நிறுவனமான ஓபன் ஆர்ம் அமைப்பின் இந்தக் கப்பல் அரிசி, மாவு, பருப்பு வகைகள், பொதியிடப்பட்ட உணவுகளை நிரப்பியவாறே காசா பயணித்துள்ளது.

காசாவில் துறைமுகக் கட்டமைப்பு ஒன்று இல்லாத சூழலில் அங்கு இறங்கு துறை ஒன்றை அமைப்பதற்கும் இந்த கப்பல் பயணித்துக்கான ஏற்பாடுகளை செய்த அமெரிக்க தொண்டு நிறுவனமான ‘வேர்லட்; சென்ட்ரல் கிச்சன்’ அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.