உக்ரைனுக்கு ஆதரவாக முதல்நாளில் 55 மில்லியன் பவுண்டுகள் நன்கொடை!

உக்ரைனில் இருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான உக்ரேனியர்களுக்கு உதவுமாறு பிரித்தானிய பேரிடர் அவசரக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னெடுக்கப்பட்டுவரும் நிதி திரட்டும் திட்டத்தின் முதல்நாளில் 55 மில்லியன் பவுண்டுகள் திரட்டப்பட்டுள்ளது.இந்த நன்கொடையில், ராணி, வேல்ஸ் இளவரசர் மற்றும் கேம்பிரிட்ஜ் டியூக் ஆகியோரின் நன்கொடைகளும் அடங்கும் என பிரித்தானிய பேரிடர் அவசரக் குழு தெரிவித்துள்ளது.நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான மக்கள் மனிதாபிமான முயற்சிக்கு நன்கொடை அளித்தனர்.மொத்தத்தில் பிரித்தானிய அரசாங்கம் அதன் UK Aid Match திட்டத்தின் ஒரு பகுதியாக நன்கொடையாக வழங்கிய 20 மில்லியன் பவுண்டுகளும் இதில் அடங்கும்.பிரித்தானிய செஞ்சிலுவைச் சங்கம், ஒக்ஸ்பாம் மற்றும் சேவ் தி சில்ட்ரன் உள்ளிட்ட பதினைந்து பிரித்தானிய உதவி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து பொதுமக்களிடம் நன்கொடை கேட்கின்றன.கடந்த வியாழக்கிழமை ரஷ்யப் படைகள் படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர்.