மத ஊர்வலத்தில் கல்வீசி கலவரம் - ஹரியானா வன்முறையில் அறுவர் உயிரிழப்பு

ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் நேற்று முன்தினம் (31) விஸ்வ இந்து பரிஷத்தின் அமைப்பு சார்பில் மத ஊர்வலம் இடம்பெற்றது.

குறித்த ஊர்வலத்தைத் திட்டமிட்டு குழப்பும் நோக்கோடு சிலர் கல் வீசி ஊர்வலத்தில் குழப்பநிலையை உருவாக்கியுள்ளனர்.

இதன் காரணமாக இரு தரப்பினறிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் நேரம் செல்ல வன்முறையாக வலுத்தது.

இத்தாக்குதலில் வாகனங்களுக்குத் தீவைக்கப்பட்டதுடன் , துப்பாக்கிச் சூடும் இடம்பெற்றது. துப்பாக்கிச் சூட்டில் 2 ஊர்க்காவல் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக நூ மாவட்டத்தில் பதற்ற நிலை உருவானதால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த வன்முறையினால் காயமடைந்த மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இதனால் மொத்த உயிரிழப்பு 6 ஆக அதிகரித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் "குற்றவாளிகள் தப்ப மாட்டார்கள், பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.