கோட்டாவின் ஆட்சியின் போது நாட்டுக்கு 5,978 பில்லியன் ரூபாய் நட்டம்!


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியின் போது, 5,978 பில்லியன் ரூபாய் நட்டமேற்பட்டதாக, இலங்கை கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது.

ஜப்பானின் நிதியுதவியுடன் கூடிய இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை உடனடியாக நிறுத்தியதால் இந்த நட்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 செப்டெம்பர் 21ஆம் திகதி கோட்டாபய ஜனாதிபதிக்கு அப்போதைய ஜனாதிபதி செயலாளரால் வழங்கப்பட்ட கடிதத்தைத் தொடர்ந்து, ஜப்பானின் இந்த திட்டம் பொருத்தமான செலவு குறைந்த போக்குவரத்து தீர்வாக இல்லை என்று குறிப்பிட்டு, அது இடைநிறுத்தப்பட்டது.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், 12 வருட சலுகைக் காலம் உட்பட 40 வருட காலப்பகுதியில் இந்த திட்டத்துக்கான கடனைச் செலுத்தும் வசதியை வழங்கியிருந்தது. இதற்கான வருடாந்த வட்டி வீதம் 0.1 சதவீதமாக இருந்தது.

இதேவேளை 2021 டிசம்பர் 31ஆம் திகதிக்குள் இந்த திட்டம் தொடர்பில் 604 மில்லியன் ரூபாய்வை நிலுவையாக செலுத்தவேண்டியிருந்தது. எனினும் இன்னும் அது செலுத்தப்படவில்லை.