சூடானில் செயற்படாமல் மூடப்பட்டிருந்த தங்கச்சுரங்கத்திற்குள் நுழைந்த 38 பேர் பலி!

சூடானின் மேற்கு கொர்டோபன் மாகாணத்தில் செயற்படாமல் மூடப்பட்டிருந்த தங்கச்சுரங்கத்திற்குள் நுழைந்த 38பேர் உயிரிழந்துள்ளனர்.தர்சயா சுரங்கத்தில் பல அடுக்குகள் சரிந்ததாகவும், இறந்தவர்களைத் தவிர குறைந்தது எட்டு பேர் காயமடைந்ததாகவும் அவர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சூடான் மினரல் ரிசோர்சஸ் கம்பெனி லிமிடெட் ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், மூடப்பட்ட செயல்படாத சுரங்கம், தலைநகர் கார்ட்டூமுக்கு தெற்கே 700 கிமீ (435 மைல்) தொலைவில் உள்ள என் நஹூட் பகுதியில் உள்ள ஃபுஜா கிராமத்தில் அமைந்துள்ளது.அரசாங்கம் முன்னெடுத்து நடத்தும் தர்சயா தங்கச்சுரங்கம் கடந்த சில மாதங்களாக செயல்படாமல் மூடப்பட்டிருந்தது.இந்தநிலையில் தங்கச்சுரங்கத்திற்குள் அனுமதியின்றி நுழைந்த 50க்கும் மேற்பட்டோர் தங்கம் எடுக்கும் நோக்கத்தோடு சுரங்கத்தை தோண்டியுள்ளனர். அப்போது சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 38பேர் உயிரிழந்ததாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.