பிரேசிலில் மின் அணை உடைந்து 30 பேர் பலி



தெற்கு பிரேசிலில் கனத்த மழை காரணமாக நீர் மின் அணை ஒன்று உடைப்பெடுத்ததை அடுத்து ஏற்பட்ட பாரிய வெள்ளத்தில் 30க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

ரியோ கிராண்டு சுல் மாநிலத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் மேலும் 60 பேர் காணாமல்போயிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கடந்த சனிக்கிழமை தொடக்கம் சுமார் 15,000 குடியிருப்பாளர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதோடு குறைந்தது 500,000 மக்கள் மின்சாரம் மற்றும் சுத்தமான நீர் இன்றி அவதியுறுகின்றனர்.

அணை உடைப்பெடுத்ததை அடுத்து இரண்டு மீற்றர் (6.6 அடி) உயரத்துக்கு அலை ஏற்பட்டிருப்பதோடு ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

எல் நினோ காலநிலை நிகழ்வே அடிக்கடி மழை தீவிரம் அடைவதற்கு காரணம் என்று பிரேசில் தேசிய வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.