படையை விட்டு வெளியேறிய 25000 சிறிலங்கா இராணுவத்தினர்

 

கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 25,000 இராணுவத்தினரும் 1,000 காவல்துறையினரும் பணியிலிருந்து விலகியுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய அவர், கடந்த வருடத்தில் சுமார் 1,000 காவல்துறை உத்தியோகத்தர்கள் பதவிகளைவிட்டு வெளியேறியுள்ளதாகவும், இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் சுமார் 200 காவல்துறையினர் பதவிகளை விட்டு விலகியுள்ளதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தவறான செயல்களை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அவர்கள் வெளியேறினர் என்றார்.

“யுத்த காலத்தில் கூட இவ்வளவு படையினர் பதவிகளை விட்டு வெளியேறிய அனுபவத்தை நாங்கள் அனுபவித்ததில்லை.

போராட்டக்காரர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் கோழைத்தனமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்த அவர், போராட்டக்காரர்களை ஒடுக்கும் அதிகாரிகளுக்கு எதிராக தமது பதவி காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.