2009 இறுதி யுத்தத்தின் மறைக்கப்பட்ட பக்கம் - கூட்டு கொலையாளி 2


இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் கடைசி கட்டத்தில் தான் இலங்கையின் மிக முக்கியமான நட்பு நாடாக சீனா உருவெடுத்தது.

தன்னுடைய ”பட்டுச் சாலை” திட்டத்தை தொடங்கியிருந்த சீனா, வல்லரசு நாடுகளுக்கு சவால் விடும் வகையில் அமையப்பெற்ற முக்கிய நாடுகளுக்கு கடன் கொடுத்து அவர்களின் துறைமுகங்களைக் கைப்பற்றும் நடவடிக்கைகளை (Debt Traps) மேற்கொண்டிருந்தது.

இலங்கை கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் அமைந்திருந்தாலும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களைக் கொண்டிருந்தாலும் குறிப்பாக திருகோணமலை துறைமுகம், ஹம்பந்தோட்டா துறைமுகம் என்பன மீதும் சீனா ஆர்வம் காட்டியது. இதைக் காட்டியே, விடுதலைப் புலிகளை தோற்கடிக்க உதவுமாறு சீனாவை இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொண்டது. 

7 பில்லியன் டொலர் நிதி உதவியை இலங்கை இராணுவத்திற்கு சீனா வழங்கியது. ஆறு F-7 போர் விமானங்களை இலவசமாக இலங்கைக்கு அளித்த சீனா, 37.6 மில்லியன் டொலர் மதிப்பிலான, வெடி குண்டுகள், பீரங்கிகள், குறிபார்த்து அழிக்கும் ஏவுகணைகள்(Guided missiles), ராக்கெட் லான்சர்கள், தரையில் இருந்து வானத்திற்கு சென்று விமானங்களை அழிக்கும் ஏவுகனைகள் (surface-to-air missiles), ஊடுறுவி அழிக்கும் வெடிகுண்டுகள் மற்றும் ராக்கெட்டுகள், பீரங்கி குண்டுகள், இரவு நேரங்களில் பார்வைக்காக பயன்படுத்தப்படும் கண்ணாடிகள், பாதுகாப்பு இயந்திரங்கள், பீரங்கிகள், போர் விமானங்கள், கப்பல்கள், ராடார் மற்றும் தொலை தொடர்பு கருவிகள் ஆகியவற்றையும் வழங்கி இலங்கை வான் படை வீரர்களுக்கான பயிற்சியையும் அளித்தது.

"The Independent UK" பத்திரிக்கை சீனாவின் பங்களிப்பை விவரிக்கையில்..

1 பில்லியன் டொலர் பணத்தை இலங்கை அரசிற்கு சீனா கொடுத்ததுடன் பல மில்லியன் டொலர்கள் மதிப்பிலான நவீன ஆயுதங்கள், இலவசமாக ஆறு F7 போர் விமானங்கள் ஆகியவற்றையும் இலங்கைக்கு அளித்தது.

இலங்கைக்கு ஆயுதங்களையும், போர் விமான பயிற்சியும் அளிக்க தனது நட்பு நாடான பாகிஸ்தானிடம் சீனா கூறியது. மிக முக்கியமாக, ஐநா பாதுகாப்பு அவையில் இலங்கை பற்றிய விவாதம் எழும்போதெல்லாம் தனது veto அதிகாரத்தை பயன்படுத்தி அதை கட்டுப்படுத்தவும் செய்தது.

ஒரு சீன ஆயுத உற்பத்தி நிறுவனம் மட்டும் 200 மில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்களை இலங்கை அரசிற்கு அளித்துள்ளது. மற்றுமொரு சீன ஆயுத உற்பத்தி நிறுவனம், 120 mm மோட்டார் குண்டுகளை இலங்கை அரசிற்கு விற்றது. 70,000 முறை சுடுவதற்கான குண்டுகள் மட்டும் 10.4 மில்லியன் டொலருக்கு விற்கப்பட்டது.

இது மட்டுமல்லாமல், 20 மில்லியன் டொலர் மதிப்பிலான 152mm பீரங்கி வெடிகுண்டுகள், 3.7 மில்லியன் டொலர் பெருமானமுள்ள வெடி குண்டுகள் ஆகியவற்றை சீனாவில் இருந்து இறக்குமதி செய்தது இலங்கை அரசு.

இலங்கை கடற்படைக்கு மட்டும் 2.7 மில்லியன் டொலர் பெருமானமுள்ள ஆயுதங்கள், 14.5mm தோட்டாக்கள், இரண்டாயிரம் RPG-7 ராக்கெட்டுகள், ஐநூறு 81mm மோட்டார் குண்டுகள் ஆகியவற்றை சீனா அளித்தது.

இது மட்டுமல்லாமல் போர் கப்பல்களில் பயன்படுத்தப்படும் ஐம்பது14.5mm வகை இரட்டைக் குழல் துப்பாக்கிகள், இருநூறு 12.7mm கனரக இயந்திரத் துப்பாக்கிகள், இருநூறு 7.62mm இயந்திரத் துப்பாக்கிகள், ஆயிரம் 7.62 2mm துணை இயந்திரத் துப்பாக்கிகள், உட்பட ஷியாங்காய் தரத்திலான போர்ப் படகுகள் ஆகியவற்றையும் சீனா வழங்கியது.

2008க்கு பிறகு இலங்கை கப்பல் படையில் நாலில் ஒரு பங்கு சீனா அளித்த படகுகளே இருந்தன என்பதும், போர் முடிந்த பிறகு, இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை விசாரிக்கக் கூடாது என்றும், இலங்கை அரசு எந்த தப்பும் செய்யவில்லை என்றும் சீன வெளியுறவுத் துறை அதிகாரிகள் ஐநா மனித உரிமை ஆணையத்தை வற்புறுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

ஆக, இலங்கை மீளவே முடியாத கடன் பொறியில் சிக்கியிருப்பதன் வெளிவராத பின்னணியாய் இறுதி யுத்தத்தில் கொடுத்த வாக்குறுதிகளும் கோடி கோடியாய் பெற்ற கடன்களுமே காரணமாய் இருக்கின்றன.

விடுதலைபுலிகளை அளிக்க உதவுதாவதாய் உள் நுழைந்த சீனா, இன்று தான் இல்லாமல் இலங்கை அடுத்த கட்டம் நோக்கி நகரவே முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

சர்தேவச நாணய நிதியத்தின் உதவிக்கு சீனாவின் பங்களிப்பு அவசியம் என்பது முதற்கொண்டு இலங்கையின் யுத்த குற்ற விசாரணை வரை சீனாவை நம்பியே இலங்கை இருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.