ரபாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 20 பேர் பலி - வீதிகளில் 37 மில்லியன் தொன் குப்பைகள்


தெற்கு நகரான ரபாவில் உள்ள மூன்று வீடுகள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தொடக்கம் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் ஐந்து சிறுவர்கள் உட்பட குறைந்தது 20 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரத்தை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.


கடந்த ஏழு மாதங்களாக நீடிக்கும் போர் காரணமாக இடம்பெயர்ந்து மக்கள் நிரம்பி வழியும் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா மீது படை நடவடிக்கை ஒன்றுக்கு இஸ்ரேல் தயாராகி வரும் நிலையிலேயே அங்கு நாளுக்கு நாள் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.


காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் ரபா மீதான இஸ்ரேலின் படை நடவடிக்கை பேரழிவை ஏற்படுத்தும் என்று உலகத் தலைவர்கள் எச்சரித்து வருகின்றனர்.


கடந்த ஞாயிறன்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், காசா எல்லை நகரான ரபா மீதான படையெடுப்பது தொடர்பில் ‘தமது தெளிவான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்’ என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.


வெள்ளை மாளிகை வெளியிட்ட இந்த அறிவிப்பில், இரு தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பில் மேலும் விபரங்கள் வெளியிடப்படவில்லை. முறையான மற்றும் நம்பகமான மனிதாபிமான திட்டம் ஒன்று இல்லாமல் முன்னெடுக்கப்படும் ரபா படை நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று அமெரிக்கா ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது.



ராப தவிர காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் சரமாரித் தாக்குதல்கள் நீடித்து வருகின்றன.


காசாவின் வடக்கில் உள்ள காசா நகரில் இரு வீடுகள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று நடத்திய தாக்குதலில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மத்திய காசாவின் புரைஜ் அகதி முகாம் உட்பட காசாவின் ஏனைய பகுதிகளில் பீராங்கி தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. மத்திய காசாவின் நுஸைரத் சந்திக்கு அருகில் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கு இடையே நேற்று உக்கிர மோதல் வெடித்துள்ளது. இதில் குறைந்தது இரண்டு இஸ்ரேலியப் படைகள் கொல்லப்பட்டு மேலும் எட்டுப் பேர் காயமடைந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா பகுதி பெரும் அழிவை சந்தித்திருக்கும் நிலையில், அங்கு வீதிகளில் 37 மில்லியன் தொன்; குப்பைகள் நிரம்பி இருப்பதாகவும் அதனை அகற்றுவதற்கு ஒரு தசாப்தத்திற்கு மேற்பட்ட காலம் தேவைப்படும் என்றும் ஐ.நா. சுரங்க செயற்பாட்டு சேவை கணித்துள்ளது.



இந்தக் குப்பைகளில் 10,000 வரையான வெடிக்காத வெடிபொருட்களும் உட்படுவதாக மனிதநேயம் மற்றும் உள்ளடக்கத்தின் மத்திய கிழக்கு பணிப்பாளர் பெடெரிகோ டெஸ்ஸி குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் காசாவில் 50,000 மற்றும் 100,000க்கு இடையிலான குண்டுகள் வீசப்பட்டிருப்பதாக தன்னார்வ தொண்டு அமைப்புகள் அனுமானிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


காசாவில் கடந்த ஏழு மாதங்களாக இடம்பெறும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34,500ஐ தொட்டுள்ளது.